Type Here to Get Search Results !

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள்ளும் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும்.... ஆளுநர் உரை

 


தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதில், தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இதற்காக, 2020 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளில் ‘டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம்’ என்ற பிரிவில் தங்க விருதினை இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து, தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. பின்தள கணினிமயமாக்கல் முறையில், மாநிலம் முழுவதும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ள ‘ஒருங்கிணையத நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்புத் திட்டம்’ உட்பட, பெரிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மின்னாளுமை கட்டமைப்பிற்குள் முன்னணி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதை ‘தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை’ நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கட்டமைப்பின் மூலம் பல்வேறு அரசு சேவைகள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளுக்கு ஏற்றதொரு மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதே, ‘தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறைசார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கொள்கையின்’ குறிக்கோளாகும். அண்மையில் வெளியிடப்பட்ட ‘இணையப் பாதுகாப்புக் கொள்கை’ மூலம், தரவுகளின் உயர்தரப் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதி செய்வதில் அரசு உறுதிபூண்டுள்ளது. மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் கிராமங்களில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள்ளும், எஞ்சிய கிராமங்களில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள்ளும் ‘பாரத்நெட் திட்டம்’ செயல்படுத்தப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அதிவேக மற்றும் அளவிடத்தக்க அலைவரிசையை வழங்குவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மாநிலப் பெரும்பரப்பு வலையமைப்பு, தமிழ்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு உட்கட்டமைப்புடன் பாரத்நெட்டை இணைப்பதன் மூலம், ஒரு ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோக தளமான ‘ஒருங்கிணைந்த மின்னணு உட்கட்டமைப்பு’ ஏற்படுத்தப்படும்.

அனைத்து நுகர்வோருக்கும் தரமான, நம்பகத்தன்மை வாய்ந்த மின்சாரத்தை வழங்குவது தமிழ்நாடு உட்கட்டமைப்பின் ஒரு அடிப்படைக் கூறாகும். தமிழ்நாடு ஒரு மின் மிகை மாநிலமாகத் தொடர்ந்து விளங்கி வருகிறது. கடயத பத்து ஆண்டுகளில், 32,149 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறனை அடைவதற்கு, 15,745 மெகாவாட் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றில், 16,166 மெகாவாட் மின்சாரம், நீர் மின்சக்தி உட்பட, புதுப்பிக்கத்தக்க மின்சக்தி ஆற்றலாகும். நம்பகமான மின்சக்தி வழங்குவதை உறுதிப்படுத்துவதற்கு, தொடரமைப்பு மற்றும் பகிர்மான வலையமைப்பின் கொள்திறனை மேம்படுத்துவதற்காக, பெருமளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழ்நாட்டின் உயர்தர சாலைக் கட்டமைப்பு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கின்றது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக, மேம்பாலப் பணிகளும், பல்வழிச் சாலை மேம்பாலப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை 1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டச் சாலை வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை மற்றும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிதியுதவியுடன் சென்னை எல்லை சுற்றுச் சாலை திட்டம் மற்றும் ஆசிய  வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன், சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாலைப் பாதுகாப்பிற்கு மாநில அரசு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிப்பதனால், மாநிலத்தில் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றது. 2016 ஆம் ஆண்டில் 71,431 ஆக இருந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 45,489 ஆகவும், 2016 ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்பிற்கு காரணமான விபத்துகளின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 8,060 ஆகவும் குறைந்துள்ளன. உயிரிழப்பிற்கு காரணமான விபத்துகளைக் குறைப்பதில் சிறந்த மாநிலத்திற்கான விருதினை 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு பெற்றுள்ளது.

குறைந்த விலை பேருந்துக் கட்டணத்துடன், பேருந்து சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோரின் பங்கினை மேலும் அதிகரிப்பதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நோயின் விளைவாக, பேருந்துப் போக்குவரத்தை இயக்குவதில் தீவிரக் கட்டுப்பாடுகள் இருந்தன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பேருந்துப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு மெல்லத் திரும்பி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.