மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலையின் வனப்பகுதியில் 150 அடி பள்ளத்தில் விழுந்து 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற உள்ளூர் வாசிகள், தொழிலாளர்களின் உடல்களை கண்டறிந்துள்ளனர். இவர்கள் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்ற அழைத்து வரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் அப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஏதும் இல்லை எனவும், கடினமான மண்ணை வெட்டி எடுப்பதற்காக இவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம் எனவும் மேகாலயா அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், சட்ட விரோத சுரங்கங்களில் நடக்கும் விபத்துக்களால் அவ்வப்போது பல தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதால் 2014 ம் ஆண்டு, இம்மாநிலத்தில் சட்ட விரோத நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இருந்தும் 2019 ம் ஆண்டு டிசம்பரில் சட்ட விரோதமாக இயங்கிய சுரங்கம் ஒன்றில் மண்சரிவு ஏற்பட்டதில் அதில் வேலை செய்து கொண்டிருந்த 15 புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை என்னவென்றே தெரியாமல் போனது.
சில சுரங்கங்கள் மீண்டும் சட்ட விரோதமாக திறக்கப்பட்டு, இயங்கி வருவதாக கூறப்படுகிறது. மேகாலயாவில் ஏறக்குறைய 5000 சட்ட விரோத சுரங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை கிழக்கு ஜெயின்டியா மலைப் பகுதியில் தான் உள்ளன. 2014 ல் நிலக்கரி சுரங்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் மேகாலயாவின் பொருளாதார செயல்பாடுகள் 70 சதவீதம் சரிவை சந்தித்தன.
The post மேகாலயாவில் 150 அடி பள்ளத்தில் விழுந்து அசாமை சேர்ந்த 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக பலி appeared first on தமிழ் செய்தி.