Type Here to Get Search Results !

இப்போதைக்கு கட்சி தொடங்கவில்லை.... எப்போதும் கட்சி தொடங்கமாட்டேன் என்று ரஜினி சொல்லவில்லை.... தமிழருவி மணியன்

 


ரஜினி தொடங்குவதாக இருந்த ரஜினி மக்கள் மன்ற கட்சிக்கு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர் தமிழருவி மணியன். ரஜினி கட்சி தொடங்கவில்லை என்றதும் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறேன். நான் போகிறே திரும்ப வரமாட்டேன் என்று கூறிய தமிழருவி மணியன், மீண்டும் காந்திய இயக்கத்தில் இணைந்து அதன் செயல்பாடுகளில் அக்கறை காட்டி வந்தார்.

இந்நிலையில் அவர் ரஜினிகாந்த் மீண்டும் கட்சி தொடங்கும் என்றே தெரிவித்திருக்கிறார். ரஜினி ரசிகர்கள் பல்வேறுகட்சிகளில் இணைந்து வரும் நிலையில், காந்திய மக்கள் இயக்கத்திலும் ரஜினி மக்கள் மன்றத்தைச் சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற விரும்பி தன்னுடன் தொடர்பு கொள்கின்றனர் என்றும், அதனால், ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களுக்கு அன்புடன் ஒன்றை உணர்த்த விரும்புகிறேன் என்றும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழருவி மணியன்.

ரஜினி ஒரு நாள் அரசியல் களத்தில் அடியெடுத்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பிலும், முதல்வர் பதவியில் என்றாவது அமர்வார் என்ற கனவிலும் அவருடைய ரசிகர்களாக நீங்கள் மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, செயற்கைப் பூச்சு இல்லாத பேச்சு, ஆணவத்திற்குச் சற்றும் இடம் தராத அடக்கம், உள்ளத்தில் பட்டதை ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, மிகச் சாதாரண மனிதனாகத் தன்னைப் பாவிக்கும் பண்பு நலன், அனைவரும் வியந்து பார்க்கும் ஆடம்பரமற்ற எளிமை மற்றும் அன்பு சார்ந்து ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் உங்கள் மனதைப் பறிகொடுத்துத்தான் நீங்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினீர்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவருக்காக எதையும் இழக்கத் துணியும் உங்கள் உயரிய அர்ப்பணிப்பைக் கடந்த நான்காண்டுகள் நேரில் கண்டு நான் நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறேன்.


பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச்சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில் இப்போது அவர் கட்சி தொடங்குவதைத் தவிர்த்திருக்கிறார். நான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று அவர் அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தை அவர் கலைத்துவிடவுமில்லை.

சிஸ்டத்தைச் சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரணடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு நான் வருந்துகிறேன். ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன். காந்திய மக்கள் இயக்கம் இந்த சந்தர்ப்பவாத செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன்.

தரம் தாழ்ந்த, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தியதில்லை. எந்த லாவணிக் கச்சேரியிலும் ஒரு நாளும் நேரத்தை விரயமாக்காமல் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள பணிகளில் காந்திய மக்கள் இயக்கம் முன்னிலும் முனைப்பாக ஈடுபடும். காந்திய மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாகத் தொடர்ந்து செயற்படும்.

நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும் காந்திய மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பயணிக்கும். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராமல் விலகி இருந்தாலும் பக்திபூர்வமாக அவரை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் எந்த மன்ற உறுப்பினரும் எவர் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி” என்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.