Type Here to Get Search Results !

ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…! Occupied temple lands should be reclaimed …. ICourt action order …!

தமிழகத்தில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,121 கோயில்கள் உள்ளன. இதில் 8,450 கோயில்கள் 100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால் பிரதான கோயில்களாக கருதப்படுகிறது. 44 ஆயிரம் கோயில்களில் 32,932 நல்ல நிலையில் இருப்பதாகவும் 6,414 கோயில்களில் சிறிய சீரமைப்பு பணிகள் செய்ய வேண்டி இருப்பதாகவும், 530 கோயில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோயில்கள் முழுமையாக சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதி மற்றும் முழுமையாக சிதிலமடைந்த கோயில்களை யுனஸ்க்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொன்மையான கோவில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவன் அடங்கிய அமர்வு இன்று (ஜூன் 7) முக்கிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழக அரசுக்கும், மத்திய தொல்லியல் துறைக்கும் கிட்டத்தட்ட 75 உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதில் தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகள்: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும். கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோயில்களில் வலுவான அறை அமைத்து சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள், நகைகள் புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்களை அமைக்க வேண்டும். கோயில் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், மத்திய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாத்தல், கோவில் நிலங்கள், சொத்துக்களை திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து மத்திய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கின் உத்தரவுகளை 12 வாரத்தில் அமல்படுத்த உத்தரவிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.