Type Here to Get Search Results !

திமுக - காங்கிரஸ் கூட்டணி விரைவில் உடையும்.... மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிதான்... எல்.முருகன் அதிரடி

 


“நாட்டின் வளர்ச்சி, தமிழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.1.3 லட்சம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்துக்குப் புதிய தொழிற்சாலைகள் வரும் வாய்ப்புள்ளது. ஏராளமான வேலைவாய்ப்பும் உருவாகும்.
 
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் பட்ஜெட்டை வரவேற்கவில்லை. அவர் சொல்வதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழகத்துக்கு இத்தனை திட்டங்கள் வந்துள்ளதைக்கூட வரவேற்க அவரிடம் மனம் இல்லை. தேர்தலுக்காக தமிழகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவித்துவிட்டார். அதிமுகவுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி அப்படியே தொடர்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. அதிமுக தலைமையில்தான் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். முதல்வர் வேட்பாளரை அதிமுக அறிவித்துள்ளது. அந்த முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். தமிழகத்தின் நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறையோடு உள்ளார். அதனால்தான் மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்திற்கு பிரதமர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடும். கூட்டணி வாயிலாக சில எம்.பி.க்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். தற்போது, ராகுல் காந்தி தமிழகத்துக்கு வருவது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைக் காணாமல் ஆக்கிவிடும்.

தமிழகத்தில் மூன்றாவது அணி என்பது அமைய வாய்ப்பில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அந்தக் கூட்டணி விரைவில் உடைய வாய்ப்புகள் உள்ளன. சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதெல்லாம், அவர் தமிழகம் வந்த பிறகுதான் தெரியவரும்” என்று எல்,முருகன் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.