Type Here to Get Search Results !

ஐஐடி மாணவர்கள் மத்தியில் மோடி…. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடியவர்களாக இருக்க வேண்டும்….

சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றுடன் நீங்கள் பணியாற்ற வேண்டுமென கரக்பூர் ஐஐடி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். (ஐஐடி) கரக்பூரில் இந்திய தொழில்நுட்ப  கழகத்தின் 66வது ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் மேற்கு வங்க ஆளுநர், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பட்டம் பெற்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், உங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியது மட்டுமல்லாமல், நிகழ்காலத்திலும் ஒரு கண் வைத்து,  நமது தேசத்தின் எதிர்காலத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும் எனக் கூறினார். 
இன்டர்நெட் ஆப் திங்ஸ் மற்றும் மாடன் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜியிலும் ஐஐடி கரக்பூர் பாராட்டத்தக்க பணிகளை செய்து வருகிறது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐஐடி கரக்பூர் மென்பொருள் துறையின் கண்டுபிடிப்புகள் நாட்டிற்கு பயனுள்ளதாக இருந்தது, இப்போது ஹெல்த் டெக்கின் எதிர்கால தீர்வுகளில் வேகமாக செயல்பட வேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. சூரிய ஒளியை மிகக் குறைவாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா உள்ளது, ஆனால் வீட்டுக்கு வீடு சூரிய சக்தியை வழங்க இன்னும் பல சவால்கள் உள்ளன, இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும்,  நீடித்த மற்றும் மக்கள் அதை எளிதாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் இந்தியாவுக்கு தேவை.  21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் நிலைமை மாறிவிட்டது, தேவைகளும் மாறிவிட்டன, அபிலாஷைகளும் மாறிவிட்டன, இப்போது ஐஐடிகள் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாமல் உள்நாட்டு தொழில் நுட்ப நிறுவனங்களில் விஷயத்தையும், அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 
நீங்கள் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சிகளில் நீங்கள் முழுமையாக வெற்றி பெறாமல் இருக்கலாம், ஆனால் உங்களுடைய தோல்வியும் கூட ஒரு வெற்றியாகவே கருதப்படும். ஏனென்றால் நீங்கள் அதிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்வீர்கள் என்பதே அதற்கு காரணம். நீங்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேறும்போது நீங்கள் உங்கள் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஸ்டார்ட் அப்களை உருவாக்க வேண்டும்.  இதோ நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கிற பட்டம், பதக்கம் இது மில்லியன் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு,  அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.  மக்களின்  வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர நீங்கள் ஒரு தொடக்கத்தை முன்வைக்க வேண்டும்,  உங்கள் திறனை உணர்ந்து நீங்கள் முன்னேற வேண்டும், எதிலும் முழு நம்பிக்கையுடன் செல்ல வேண்டும். கொரோனா காலத்தில் ஐஐடிகள் உருவாக்கிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மிகப் பெரும் உதவியாக இருந்தது. 
அதேநேரத்தில் உத்தகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெருந்த துயரம் குறித்து விவரித்த அவர், பேரழிவை  சமாளிக்கும் வகையில் நமது உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் உலகிற்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளன, இதுபோன்ற சூழ்நிலையில் பேரழிவின் விளைவுகளை எதிர் கொள்ளும் திறன் கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும்   இவ்வாறு அவர் பேசினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.