Type Here to Get Search Results !

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி.... தமிழகத்தில் மூன்று கட்டங்களாக பிரசாரம்

 


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது, அதை எதிர்கொள்வதற்காக தமிழக அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் திமுக-அதிமுக இடையே போட்டி என்ற சூழல் உருவாகியுள்ளது.  அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதற்கான வேலைகளில் பாஜக மாநில தலைமை மற்றும் தேசிய தலைமைகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இதுவரை வடமாநிலங்களில் மட்டுமே கவனம் செலுத்திவந்த மோடி, அமித்ஷா, நாடா கூட்டணி, ஆகியோர் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆதி கவனம் செலுத்த உள்ளனர். அதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்றும், இரட்டை இலக்க வெற்றிகளைப் பெற்று பாஜக உறுப்பினர்களை இந்த முறை  சட்டமன்றத்திற்குள் நுழைக்க வைக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அதற்கு உறுதுணையாக  அதிமுகவை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வரும் சட்டமன்ற  தேர்தலை முன்னிட்டு நம் பாரத பிரதமர் மோடி மூன்று முறை தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் உரையாற்ற இருக்கிறார் என கூறப்படுகிறது. பிரதமரின் முதல் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அரசு விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட உள்ளது.  வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி  வைத்தல், சென்னை கடற்கரை- அத்திப்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை, மற்றும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நாட்டுக்கு பிரதமர் அற்பணித்தல், மேலும் ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள அர்ஜுன் மார்க்-2 எனும் புதிய வகை பீரங்கியை மோடி அறிமுகம் செய்தல் மற்றும் சென்னை ஐஐடியில் நடைபெற உள்ள நிகழ்ச்சி என மொத்தம் 5 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.  இந்நிலையில் முதல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோடி வரும்  14ம் தேதிக்கு சென்னை வர உள்ளார். அது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அடுத்தடுத்து நடைபெறும் விழாக்கள் கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில்  நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. மோடி கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடியாரும் கலந்து கொள்வார் என தெரிகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மாபெரும் பொதுக் கூட்டங்களை போல நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மோடி ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மோடி அடுத்தடுத்து மூன்று முறை வந்து பிரச்சாரத்தில் பங்கெடுப்பது தமிழக பாஜகவுக்கு மிகப் பெரும் திருப்புமுனையாக அமையும் என பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரதமரின் தமிழக வருகையால் உற்சாகத்தில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.