Type Here to Get Search Results !

உத்தரகண்ட் மாநிலத்தில் திடீர் வெடிப்பு... ஆய்வு செய்ய தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்

 


உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பந்தப்பட்ட முகமைகள், மாநில நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமைச்சரவை செயலர் அப்போது உத்தரவிட்டார். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டவும், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை விரைவில் மீட்கவும் அவர் வலியுறுத்தினார்.

மீட்பு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்து இயல்பு நிலை திரும்பும் வரையில் கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரகண்ட் அரசின் தலைமைச் செயலாளர், அங்கு நிலவும் கள நிலவரங்களைப் பற்றியும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கும், வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

மத்திய நீர் ஆணையத்தின் தகவலின் படி தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்பட்டதால் நீரோட்ட வெள்ள அபாயம் இல்லை. அருகாமையில் உள்ள கிராமங்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்திய ராணுவமும், இந்திய- திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இணைந்து மேற்கொள்ளும் மீட்புப் பணிகளில், ஒரு சுரங்கத்திலிருந்து 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஹிந்தோனிலிருந்து சென்றுள்ள கூடுதலான மூன்று குழுக்கள் இன்று இரவு அந்தப் பகுதியை சென்றடையும். 200-க்கும் மேற்பட்ட இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் பொறியியல் பணிக்குழுவினரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.‌

அந்தப் பகுதியில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை எச்சரிக்கை ஏதுமில்லை என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம்  தெரிவித்துள்ளது.

மத்திய உள்துறை செயலாளர், எரிசக்தி செயலாளர், இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், மத்திய நீர் ஆணையத்தின் தலைவர், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும், உத்தராகண்ட் மாநிலத்தின் தலைமை செயலாளரும், அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பனிப்பாறைகள் திடீரென்று வெடித்ததால் ரிஷிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 13.2 மெகாவாட் திறன் கொண்ட ரிஷிகங்கா நீர்மின் திட்ட கட்டமைப்புகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் தௌலிகங்கா ஆற்றின் மீது தபோவன் பகுதியில் செயல்படும் தேசிய அனல்மின் கழகத்தின் நீர் மின்சார திட்டமும் இந்த இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளானது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.