Type Here to Get Search Results !

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவிப்பு….

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் விளாசியுள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சென்னையில் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். சுழற்பந்துவீச்சாளர்களையே இயான் மார்கன் பவர் பிளேவில் பயன்படுத்தினார். அதற்குப் பலனாக வருண் சக்ரவர்த்தி வீசிய 2-வது ஓவரின் 2-வது பந்தில் கோலி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் ரஜத் படிதரும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, படிக்கல் பாட்னர்ஷிப்புக்கு ஒத்துழைப்பு தர கிளென் மேக்ஸ்வெல் அதிரடி காட்டினார். இதனால், பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்தது.
பவர் பிளே முடிந்த பிறகும் மேக்ஸ்வெல் அதிரடி காட்டி ரன் ரேட்டை 8-க்கு மேல் கடைப்பிடித்து வந்தார். அதேசமயம், 28-வது பந்தில் அவர் அரைசதத்தையும் எட்டினார்.
கடைசி 10 ஓவர்களில் ஆட்டம் மாறுவது சென்னை ஆடுகளத்தில் வழக்கமாக இருந்தாலும், முதல் 10 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பிறகு, எதிர்பார்த்ததைப்போல் 12-வது ஓவரில் கொல்கத்தா பாட்னர்ஷிப்பைப் பிரித்தது. படிக்கல் 25 ரன்களுக்கு பிரசித் கிருஷ்ணா வேகத்தில் வீழ்ந்தார்.
விக்கெட் விழுந்ததால், அடுத்த இரண்டு ஓவர்களில் பெரிதளவில் பவுண்டரிகள் போகவில்லை. வருண் சக்ரவர்த்தி வீசிய 15-வது ஓவரில் ஏபி டி வில்லியர்ஸ் 2 பவுண்டரிகளும், மேக்ஸ்வெல் 1 சிக்ஸரும் விளாச ஆட்டம் மீண்டும் அதிரடிக்கு மாறியது.
அரைசதம் அடித்து சதத்தை நோக்கி விளையாடி வந்த மேக்ஸ்வெல் 78 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் வேகத்தில் ஆட்டமிழந்தார்.
எனினும், கடைசி கட்ட அதிரடிக்கு டி வில்லியர்ஸ் களத்தில் இருந்ததால் பெங்களூரு பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது.
ஆண்ட்ரே ரஸல் வீசிய 18-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் விளாச, ஹர்பஜன் சிங் வீசிய 19-வது ஓவரில் கைல் ஜேமிசன் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச அந்த அணி 170-ஐத் தாண்டியது. ஹர்பஜன் ஓவரில் டி வில்லியர்ஸ் மேலும் ஒரு சிக்ஸர் அடிக்க 27-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
ரஸல் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளையும் எதிர்கொண்ட டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 21 ரன்களை விளாச பெங்களூரு அணி 200 ரன்களைத் தாண்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்துள்ளது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டி வில்லியர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். ஜேமிசன் 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.