Type Here to Get Search Results !

தமிழகத்தில் தேசவிரோதப் போக்கு அதிகரிப்பு…. மத்திய படைகளை குவிக்க சுப்பிரமணியம் சுவாமி வலியுறுத்தல்

2019ம் ஆண்டுக்கு முன்பு காஷ்மீரில் இருந்ததுபோன்று தற்போது தமிழகத்தில் தேசவிரோதப் போக்கு அதிகரித்து வருவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவ்வப்போது, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோருக்கு எதிராக அவர் பதிவிடும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள திமுக தலைமையிலான அரசு குறித்து கடந்த சில நாட்களாகவே சுப்பிரமணியன் சுவாமி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசு கலைக்கப்படும் என்று ட்விட்டரி கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.  தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கிய சில நாட்களிலேயே அது, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துவதாக உள்ளது  என்றும் கூறியிருந்தார்
இதேபோல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்த நிலையில்,  7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக முதல்வரின் பரிந்துரையை  நிராகரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2019ம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேசிய எதிர்ப்பு எழுச்சியின் அச்சுறுத்தலில் தமிழகம் இன்று உள்ளது.  தமிழக முதல்வர் இது தொடர்பாக ரா அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணம் வழங்க வேண்டும் . மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதிலாக, மத்திய அரசு சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.