Type Here to Get Search Results !

சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்

 

சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. 11 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன் பேரனுக்கே சீட் தர மறுத்ததுதான் பத்ம சேஷாத்ரி பள்ளி என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பத்தினர் முன்னிலையிலேயே தனக்கே உரிய பாணியில் சாதுரியமாக வெளிப்படுத்திய சம்பவமும் நிகழ்ந்தது.

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர் மாணவிகள். ஆனால் இந்த புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது.

இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த விசாரணைக்கும் முதலில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஒத்துழைப்பு தரவில்லை என்றே போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலை சஸ்பென்ட் செய்துவிட்டோம் என்றது பள்ளி நிர்வாகம்.


காமுகன் ராஜகோபால் கைது

இதன்பின்னர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ராஜகோபாலை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். மேலும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ரஹ்மான் விவகாரம்

இசையமைப்பாளர் ஏ..ஆர். ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்றில், தாம் படித்த பள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் தெருத்தெருவாக பிச்சை எடுக்க சொன்னார்கள் என பள்ளியின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கார் விருது பெற்றபோது, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, எங்கள் பத்ம சேஷாத்ரி பள்ளியின் டிராப் அவுட் ஸ்டூடண்தான் ஏ.ஆர். ரஹ்மான் என பெருமிதம் பேசியிருந்தார். இப்போது இந்த 2 வீடியோக்களுமே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருணாநிதி பேச்சு

இதனிடையே 11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பம் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் பெயரை சொல்லாமல் அந்த பள்ளியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை தமக்கே உரிய பாணியில் சாதுரியமாக அம்பலப்படுத்தினார்.

பேரனுக்கு சீட் தர மறுப்பு

அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது: என்னை மகேந்திரன் அழைத்த போதுகூட, அவருடைய தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தார் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தார்கள். மிகவும் உரிமையோடு ‘நீங்கள் வந்து தான் தீரவேண்டும்’ என்று அவர்கள் கேட்டபோது, அவர்களுடைய காதிலே விழாமல் என்னுடைய மனைவி- ‘என் பேரனுக்கு ஒரு சீட் நீங்கள் பள்ளியிலே தர முடியாது என்று மறுத்துவிட்டீர்கள். இப்போது வந்து அவரைக் கூப்பிடுகிறீர்களே’ என்று சொன்னபோது, நான் அவருடைய வாயைப் பொத்தி, ‘சும்மா இரு’ என்று, இப்போது இந்த நாடகத்திலே பார்த்தது மாதிரி, மனைவியின் வாயைப் பொத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

குத்திக்காட்டிய கருணாநிதி

இதை அவர் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், நான் அதை ரசித்தேன், அவர் சொன்னதை அல்ல- அவ்வளவு கண்டிப்பாக, அமைச்சர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும் சட்டப்படி தான் நாங்கள் பள்ளியில் இடம் தருவோம், நடந்து கொள்வோம் என்பதை அவ்வளவு கண்டிப்பாக கடைப்பிடித்த காரணத்தால் தான். இவ்வாறு கருணாநிதி நாசூக்காக தமது பேரனுக்கு சீட் தர மறுத்த ஒய்.ஜி. குடும்பத்தினர் பள்ளியை பொதுமேடையிலேயே எக்ஸ்போஸ் செய்திருந்தார். அதுதான் அன்று தலைப்பு செய்தியாகவும் ஊடகங்களில் இடம்பெற்றது!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.