Type Here to Get Search Results !

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால்… தாமிரபரணியாற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கன்னியாகுமரி கடலில் வளிமண்டல சுழற்சி உருவானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதே நேரம் மீன்பிடி தொழில், ரப்பர் பால்வெட்டுதல், தென்னை சார்ந்த தொழில், உப்பளம், செங்கல்சூளை, கட்டிட தொழில் உட்பட அனைத்து விதமான தொழில்களும் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கின.
இன்று மிதமான சாரல் பொழிந்தாலும் மலையோர பகுதிகளில் இருந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தன. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 2982 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46.08 அடியாக உயர்ந்து வெள்ள அபாய கட்டத்தில் உள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 528 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், உபரியாக 1010 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
இதைப்போல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 71.26 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு உள்வரத்தாக 963 கனஅடி தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வெள்ள அபாய கட்டத்தில் இருப்பதால் பொதுப்பணித்துறை நீர்ஆதார பொறியாளர்கள் குழுவினர் 3 கட்டமாக சுழற்சி முறையில் அணைகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பேரிடர் ஏதும் ஏற்படாத வகையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேச்சிப்பாறையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், மற்றும் உபரிநீர் கரைபுரண்டு ஓடுவதால் குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தினர். கோதையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மழையின் வேகம் குறைந்து அவ்வப்போது சாரல் மட்டும் பொழிந்ததால் மழை சேதம் தவிர்க்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.