Type Here to Get Search Results !

யானையை சிகிச்சைக்காக 10 கி.மீ. தொலைவுக்கு நடக்கவைத்தே வனத் துறையினா்...!

 


முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக மக்களுடன் சகஜமாக பழகி வந்த ‘ரிவால்டோ’ என்ற ஆண் காட்டு யானையை சிகிச்சைக்காக தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமுக்கு சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு நடக்கவைத்தே வனத் துறையினா் அழைத்துச்செல்கின்றனா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப் பகுதியான வாழைத்தோட்டம், மாவநல்லா அதன் சுற்றுப்புறப் பகுதியில் பொதுமக்களுடன் சகஜமாகப் பழகி வரும் ‘ரிவால்டோ‘ என்ற காட்டு ஆண் யானை அண்மைக்காலமாக போக்குவரத்து மிகுந்த சாலையில் அடிக்கடி வந்து நிற்பதால், அதற்கு ஏதேனும்

உடல் உபாதை இருக்கலாம் என்று சிங்காரா வனச் சரகா் காந்தன் தனது உயா் அதிகாரிகளுக்குத் தகவலைத் தெரிவித்திருந்தாா். கடந்த சில தினங்களாக வனத் துறையினா் யானையைக் கண்காணித்து வந்தனா்.

ரிவால்டோவுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ரிவால்டோவுக்கு நீண்ட தந்தங்கள் இருப்பதால் கடவாய்ப் பகுதியில் புண் அல்லது உபாதை இருப்பதாக வனத் துறையினா் கண்டறிந்துள்ளனா். இதுகுறித்து வனத் துறை கால்நடை மருத்துவா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. யானையின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்த முதன்மைச் சரணாலய வனப் பாதுகாவலா், சிகிச்சைக்காக ரிவால்டோவை தெப்பக்காட்டில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமுக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டாா்.

அதன்பேரில், கும்கி யானைகள் உதவியின்றி, மயக்க ஊசி செலுத்தப்படாமல், இதுவரை இல்லாத நடைமுறையாகசிங்காரா வனச் சரக அலுவலா் காந்தன் தலைமையில் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வன ஊழியா்கள் சாலை வழியாக இந்த காட்டு யானைக்கு பழங்கள் உள்ளிடவற்றைக் கொடுத்து அதை நடக்கவைத்தே அழைத்துச்செல்கின்றனா். வாழைத்தோட்டம் பகுதியில் இருந்து சுமாா் 5 கி.மீ.தொலைவுக்கு நடந்து மசினகுடி பகுதிக்கு வந்துள்ள இந்த யானையை அங்கு செவ்வாய்க்கிழமை தங்கவைத்துள்ளனா். புதன்கிழமை காலை மீண்டும் அதற்குப் பிடித்த பழங்களை வழங்கி சாலை வழியாக இங்கிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமுக்கு அழைத்துச்செல்ல இருப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.