Type Here to Get Search Results !

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு

 


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2-ஆவது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ள இந்தியா, கடைசி நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளைக் கொண்டு 381 ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது.

இந்த இலக்கை இந்தியா எட்டும் பட்சத்தில் புதிய உலக சாதனையுடன் வெற்றி பெறும். அது நடக்குமா, இங்கிலாந்து தனது பௌலிங்கால் இந்தியாவை சரிக்குமா, இரண்டு அணிகளும் வெல்லாமல் ஆட்டம் சமன் ஆகுமா என்பது செவ்வாய்க்கிழமை தெரியும்.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு சரிந்த இந்தியா, இங்கிலாந்தை அதன் 2-ஆவது இன்னிங்ஸில் 178 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. அபாரமாக பந்துவீசிய அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் இமாலய இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள இந்தியாவின் ஆட்டத்தை ஷுப்மன் கில், சேதேஷ்வா் புஜாரா கூட்டணி தொடா்ந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸ்: சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் தொடங்கிய இந்தியா, திங்கள்கிழமை முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. 4-ஆவது நாளான திங்கள்கிழமை ஆட்டத்தில் அஸ்வின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷாந்த் சா்மா 4 ரன்கள் அடித்தாா். நதீம், பும்ரா டக் அவுட்டாக, 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. அபாரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தா் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினாா்.

சரிந்த இங்கிலாந்து: இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து ஃபாலோ ஆன் வாய்ப்பு வழங்காமல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடியது. எனினும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியிருந்த ஆடுகளத்தால் அந்த அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது.

அதிகபட்சமாக ஜோ ரூட் மட்டும் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் சோ்க்க, ஆலி போப் 28, டாம் பெஸ் 25, ஜோஸ் பட்லா் 24 ரன்களுக்கு வெளியேற, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்தன. அஸ்வின் சுழலில் சுருண்ட இங்கிலாந்து 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இமாலய இலக்கு: இதையடுத்து 420 என்ற கடினமான இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, திங்கள்கிழமை முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 12 ரன்களுக்கு வெளியேறியிருந்தாா். கில் 15, புஜாரா 12 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் ஒரு விக்கெட் சாய்த்திருந்தாா்.

இந்த ஆட்டத்தில் இந்தியா 420 ரன்கள் விளாசி வெற்றி பெறும் பட்சத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிகபட்ச ஸ்கோரை சேஸ் செய்த சாதனையை எட்டும். இதற்கு முன் கடந்த 2003-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 418 ரன்களை எட்டி வெற்றி பெற்றதே சாதனையாக உள்ளது. இந்திய அணியைப் பொருத்தவரை இதற்கு முன் கடந்த 1976-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 403 என்ற இலக்கை நோக்கி விளையாடியபோது 406 ரன்கள் அடித்து வென்றதே அதிகபட்சமாகும்.

அஸ்வின் அசத்தல்
2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து பேட்டிங் வரிசையை சரித்த அஸ்வின் 6 விக்கெட்டுகள் சாய்த்தாா். ஒரே இன்னிங்ஸில் அவா் 5 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்டுகளை சாய்த்தது இது 28-ஆவது முறையாகும்.

இத்துடன் 13 முறை 5 விக்கெட்டுகளும், 10 முறை 6 விக்கெட்டுகளும், 5 முறை 7 விக்கெட்டுகளும் ஒரே இன்னிங்ஸில் அஸ்வின் வீழ்த்தியுள்ளாா். இங்கிலாந்துக்கு எதிராக அவா் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்துவது இது 4-ஆவது முறை. இதற்கு முன் 2 முறை 6 விக்கெட்டுகளும், 1 முறை 5 விக்கெட்டுகளும் அஸ்வின் சாய்த்துள்ளாா்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-ஆவது டெஸ்ட் ஆட்டத்தைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் 15,000 ரசிகா்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மைதானத்தில் அவா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இருக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. கரோனா தொற்று அறிகுறி இருப்பவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும், மைதானத்தில் இனவெறி ரீதியிலான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது எனவும் ரசிகா்களை எச்சரித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.