Type Here to Get Search Results !

தமிழக பள்ளிகள் இன்று திறக்க அனுமதி..... 6 நாட்கள் வகுப்பு.... விதிகள் என்ன.....?

 


தமிழக பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏற்கனவே வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், இன்று(பிப்.,8) முதல், 9 மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் வகுப்புகள் துவங்க உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகத்தில், 2020 மார்ச்சில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன.புதிய கல்வி ஆண்டு துவங்கிய போதிலும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாமல், மாணவர்கள், வீட்டில் இருந்தே படிக்கும் வகையில், 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டன. கல்வி, 'டிவி' வழியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தாக்கம் குறைந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக, 2020 டிச., 2ல், முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிச., 7ல் இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்துவதற்காக, கல்லுாரிகள் திறக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, ஜன., 19 முதல், பள்ளிகள் திறக்கப்பட்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கின. நேரடி வகுப்புகள் துவங்கிய பின், மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், பெரிய அளவில் எந்த பரவலும் ஏற்படவில்லை என, தெரிய வந்தது.

இதையடுத்து, பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு வகுப்புகளையும், கல்லுாரிகளில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகளை துவக்கவும், அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இன்று முதல், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கான வகுப்புகள், அனைத்து பள்ளிகளிலும் துவங்க உள்ளன.

பள்ளிகளை நடத்தும் விதிகள் குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கு, இன்று(பிப்.,8) முதல் நேரடி வகுப்புகளை துவங்கலாம். போதிய வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பின், திங்கள் முதல் சனிக்கிழமை வரை, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, காலை, மாலை என, முழு வேளையாக பள்ளிகள் இயங்கலாம்.

வகுப்பறைகளில் இடவசதி இருந்தால், கூடுதல் இருக்கைகள் அமைத்து, சமூக இடைவெளிப்படி மாணவர்களை அமர வைக்கலாம். சமூக இடைவெளியை பின்பற்ற, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதலாக சில வகுப்பறைகள் தேவைப்பட்டால், ஆய்வகம், நுாலகம், கூட்ட அரங்கம் போன்றவற்றில் வகுப்புகள் நடத்தலாம்.

அதிக வகுப்பறைகள் காரணமாக, கூடுதல் ஆசிரியர்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டால், வகுப்பு வாரியாக மொத்த மாணவர்களையும், கூட்ட அரங்கத்தில் அமர வைத்து, வகுப்புகளை நடத்தலாம். சில பள்ளிகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்டால், பிரிவு வாரியாக, ஒரு நாள் விட்டு, ஒரு நாள் செயல்படலாம். சில பிரிவுகள், காலை, மாலை என, இரண்டு, 'ஷிப்டு'களாக செயல்படலாம்.

பள்ளிகளின் இட வசதிகளுக்கு ஏற்ப, இதற்கான முடிவுகளை, தலைமை ஆசிரியர்கள் எடுக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கல்லுாரிகள் திறப்பு குறித்து, உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வா பிறப்பித்த உத்தரவு: அனைத்து வகை இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமா படிப்புகள் உள்ளிட்டவற்றுக்கு, இன்று முதல், வகுப்புகள் துவங்கலாம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, வாரத்தில் ஆறு நாட்களும் வகுப்புகளை நடத்த வேண்டும்.

தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் செய்முறை வகுப்புகளை, உரிய காலத்திற்குள் முடிக்கும் வகையில், திட்டமிட்டு, வகுப்புகளை நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார். அண்ணா பல்கலையை பொறுத்தவரை, அனைத்து படிப்பிலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, இன்று முதல் கல்லுாரிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சென்னை பல்கலையின் வளாக மாணவர்களுக்கு மட்டும், தற்போதைய, 'ஆன்லைன்' வகுப்புகள் தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளும், தன்னாட்சி கல்லுாரிகளும், தனியார் பல்கலைகளும், இன்று முதல் நேரடி வகுப்புகளை துவங்குகின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.