Type Here to Get Search Results !

12 தொகுதிகள் கேட்டோம், 6 தொகுதிகள் தருவதாக சொன்னார்கள்….ஜி.கே.வாசன் பேட்டி

 

12 தொகுதிகள் கேட்டோம், 6 தொகுதிகள் தருவதாக சொன்னார்கள், தமாகா குரல் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். அதற்கு கவுரவமான தொகுதிகளை அதிமுக ஒதுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் பேட்டி அளித்தார்.

2016- சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை அடைந்தப்பின் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து முதலில் வெளியேறினார் வாசன். காங்கிரஸ், தமாகா ஒரே கூட்டணியில் இருக்க முடியாத காரணத்தால் இயற்கையாகவே அதிமுக பக்கம் ஒதுங்கினார்.

கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவுக்கு நல்ல நண்பனாக சில நேரம் இடிந்துரைத்தாலும் பல நேரம் அதிமுக அரசுக்கு பக்கபலமாக இருந்தார். அதிமுகவில் மாநிலங்களவை சீட்டு திடீரென வாசனுக்கு வழங்கப்பட்டது. பாஜக அமைச்சரவையில் அமைச்சராக ஆவார் எனக்கூறப்பட்டது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் எளிதாக இடங்களை கேட்டுப்பெறலாம் என்று ஜி.கே.வாசன் நினைத்திருந்த நிலையில் அவர் கட்சி கேட்ட 12 தொகுதிகளை வழங்க அதிமுக மறுத்து வருகிறது.

அதிகபட்சம் 6 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறி வந்த நிலையில் பல சுற்று பேச்சு வார்த்தை நடந்த நிலையில் தமாகா கேட்ட தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா? என ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘தமிழ் மாநில காங்கிரஸ் 12 தொகுதிகளை கோரினோம். அவர்கள் 6 தொகுதியை தருவதாக கூறியுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை அதிமுக ஏற்கும் என்று நம்புகிறோம். அது கிடைக்கும் வரை எங்கள் பேச்சு வார்த்தை தொடரும்.

சைக்கிள் சின்னம் ஒரு முக்கியமான சின்னம் இதற்கான சட்டப்போராட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளன. சைக்கிள் சின்னம் கிடைத்தாலும் அதை வழக்கு போட்டு முடக்கப்பார்த்தாலும் பார்ப்பார்கள். அதனால் கடைசி நிமிடம் வரை போராட்டம் தொடரும். அதனால் அதன் பிறகுதான் அதிமுக கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பேன்.

எங்களுக்கு தேவையான தொகுதியை ஒதுக்குவார்கள் என்று அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வெற்றியின் அடிப்படையிலேயே அதிமுகவுடன் பேசுகிறேன். கட்சி வெல்ல வேண்டும் அதற்கு நான் சீட்டு வாங்கணும், சட்டப்பேரவையில் தமாகாவின் குரல் ஒலிக்கணும் அதற்காத்தான் தமாகா போராடுகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணியின் முதன்மைக்கட்சி. முதல்வர் துணை முதல்வர் மூன்றாவது முறை ஆட்சிக்கு வர நாங்கள் கூட்டணியில் இருந்து அவர்களை ஆதரித்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே அவர்களிடம் ஒன்றை சொல்லி அவர்கள் எங்கள் கோரிக்கையை பேசி அறிவிப்பார்கள்.

நான் 12 தொகுதியை கேட்டேன், அவர்கள் 6 தொகுதிகளை தருவதாக கூறியுள்ளனர். நான் என்னுடைய கருத்தைச் சொல்லிவிட்டேன். அவர்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன்.

மரியாதைக்குரிய தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அதற்கு கூட்டணியின் தலைமைக்கட்சி உதவவேண்டும் அதுதான் எங்கள் எதிர்ப்பார்ப்பு’.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.