Type Here to Get Search Results !

அதிமுகவில் யாருக்கு மீண்டும் வாய்ப்பு…. யாருக்கு வாய்ப்பு இல்லை….!

 

அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் 171 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அக்கட்சி. மூன்று அமைச்சர்கள் தவிர, தற்போதைய அமைச்சர்கள் எல்லோருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலின்படி ஆவடி தொகுதியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், மதுரவாயல் தொகுதியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், ஜோலார்பேட்டையில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, பாலக்கோட்டில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ஆரணியில் அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், குமாரபாளையத்தில் மின்துறை அமைச்சர் பி. தங்கமணி, பவானியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், கோபிச்செட்டிப் பாளையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவினாசி தனித் தொகுதியில் சபாநாயகர் பி. தனபால், தொண்டாமுத்தூரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, பொள்ளாச்சி தொகுதியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் வி. ஜெயராமன், உடுமலைப்பேட்டையில் கால்நடைபராமரிப்புத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், திண்டுக்கல் தொகுதியில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், கரூர் தொகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திருச்சி கிழக்குத் தொகுதியில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கடலூரில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், வேதாரண்யத்தில் ஜவுளித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், நன்னிலம் தொகுதியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ், விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜு, திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ராஜபாளையம் தொகுதியில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, சங்கரன்கோவில் தனித் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

மு.க. ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆதி ராஜாராம், வில்லிவாக்கம் தொகுதியில் ஜே.சி.டி. பிரபாகர், அண்ணாநகரில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஆலந்தூரில் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, வேப்பனஹள்ளியில் முன்னாள் அமைச்சர் கே.சி. முனுசாமி, நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அருப்புக்கோட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், திருவரங்கம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மதுரை கிழக்கு தொகுதியில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன்செல்லப்பா, சைதாப்பேட்டையில் சைதை துரைசாமி, மைலாப்பூரில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ், ஒரத்தநாடு தொகுதியில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்தியலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய அமைச்சர்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில், வளர்மதி, கதர் வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகிய மூவரும் பட்டியலில் இடம்பெறவில்லை. நிலோஃபர் கபில் கடந்த முறை போட்டியிட்ட வாணியம்பாடி தொகுதி இந்த முறை பா.ம.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளர்மதியின் தொகுதியான திருவரங்கம் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கதர்வாரியத் துறை அமைச்சர் பாஸ்கரனின் தொகுதியான சிவகங்கையில் முன்னாள் எம்.பி. பி.ஆர். செந்தில்நாதனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் மணிகண்டன், செம்மலை, அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்த பட்டியலில் 14 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே 6 பேர் கொண்ட முதல் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ள நிலையில், இந்தப் பட்டியலையும் சேர்ந்து மொத்தம் 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

பா.ம.கவுக்கு 23 தொகுதிகளும் பா.ஜ.கவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இன்றும் 14 தொகுதிகள் மீதமுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.