Type Here to Get Search Results !

அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த நடவடிக்கை

அதிமுக கொடுக்க முன்வந்த 13 தொகுதிகளை உதறித்தள்ளியுள்ள தேமுதிக நேற்று ஒரு நாள் முழுவதும் ஆலோசனை நடத்தியது. இதில் பெரும்பாலானவர்கள் கூட்டணியில் இருந்து வெளியே வந்ததை விரும்பவில்லை என்கிறார்கள். எம்எல்ஏ கனவில் இருந்து மாவட்டச் செயலாளர்கள் பலரும் கட்சியின் முடிவால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். கூட்டணியில் இருந்து விலகிய பிறகு பட்டாசு வெடிப்பது, இனிப்புகள் கொடுப்பது என்பது எல்லாம் முதல் நாளே செய்து வைத்த செட்டப் என்கிறார்கள். இதற்காகவே ஒரு சில மாவட்டச் செயலாளர்களுக்கு தனி அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி அவர்கள் கூட்டணி முறிவை பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால் அதே சமயம் மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் கட்சி அலுவலகத்திற்குள் புலம்பித்தள்ளிக் கொண்டிருந்தனர். எப்படியும் கணிசமான தொகுதிகளை பெற்றுவிடுவார்கள், அதனை வாங்கி தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகும் கனவில் பலர் சென்னையில் இருந்தனர். ஆனால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு இனி அந்த வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்து மாவட்டச் செயலாளர்கள் பலர் பாதியிலேயே கட்சி அலுவலகத்தை விட்டு வேறு காரணங்களை கூறி புறப்பட்டதாக சொல்கிறார்கள்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவிற்கு வேறு திமுக கூட்டணியிலும் இணையும் வாய்ப்பே இல்லை. இனி இருக்கும் வாய்ப்பு தினகரனும், கமலும் தான். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்யவே முடியாது. அமமுகவை பொறுத்தவரை தினகரன் தான் முதலமைச்சர் வேட்பாளர், மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை கமல் தான் முதலமைச்சர் வேட்பாளர். இனி கூட்டணியில் இணைந்தாலும் விஜயகாந்தை அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கமாட்டார்கள். முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை ஏற்காத கட்சியுடன இனி தேமுதிக கூட்டணி வைக்காது.
அப்படியே எல்லாம் சுமுகமாக முடிந்து அமமுக அல்லது கமல் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி வாய்ப்பு என்பது சுத்தமாக கிடையாது. எனவே இந்த முறை தனித்து போட்டி என்கிற முடிவை தேமுதிக எடுக்க உள்ளதாக கூறுகிறார்கள். இதற்கு வசதியாக 234 தொகுதிகளுக்கு தலா 3 பேரை வேட்பாளராக பரிந்துரைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு பிரேமலதா உத்தரவிட்டுள்ளார். நேற்று இது குறித்து நடந்த ஆலோசனையின் போது பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் மிகவும் மெனக்கெட்டும் வேட்பாளர்களை ரெடி பண்ண முடியாத நிலையே உள்ளது. பலர் விருப்ப மனு அளித்திருந்தாலும் கூட்டணியில் போட்டியிடவே அவர்கள் தயாராக இருந்துள்ளனர்.
தனித்து போட்டி என்றால் நான் ரிஸ்க் எடுக்கத்தயாராக இல்லை என்று பலர் ஜகா வாங்கியுள்ளனர். இதனை அடுத்து மாவட்டச் செயலாளர்களுக்கு மேலும் ஒரு நாள் டைம் கொடுத்து தொகுதிக்கு ஒரு வேட்பாளரை கட்டாயம் ரெடி செய்யுமாறு பிரேமலதா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் இதனை மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.