Type Here to Get Search Results !

தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை அதிமுகவிடம் பாஜக பெற வாய்ப்பு…. எல்.முருகன்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, 41 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டது. ஆனால், அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க முன்வந்தது. 41  தொகுதிகளை ஒதுக்க முடியாவிட்டாலும் பாமகவைவிட ஒரு தொகுதி கூடுதலாக வழங்கினால் போதும் என்று தேமுதிக இறங்கிவந்தது. ஆனால், அதிமுக 15 தொகுதிகளோடு ஒரு ராஜ்ய சபா சீட்டு தருவதாக தெரிவித்தது. 
இதுதொடர்பாக நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக  தேமுதிக அறிவித்தது.
 இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்க முன்வந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக விட்டு தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக அதிமுகவிடம் குறைந்தபட்சம் 30 தொகுதிகளை எதிர்பார்த்த பாஜக, கூடுதல் தொகுதிகளை அதிமுகவிடம் கேட்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் விளக்கம் அளித்துள்ளார்.  
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதால் எங்கள் கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும். விரைவில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்” என்று தெரிவித்தார். தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை அதிமுகவிடம் பாஜக பெற வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எல்.முருகன், “இது குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.