Type Here to Get Search Results !

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.43.59 லட்சம் கோடியாக அதிகரிப்பு

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58,121 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43.59 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. தொடா்ந்து இரண்டு வாரங்களாக சரிவைச் சந்தித்து வந்த செலாவணி கையிருப்பு கணக்கீட்டு வாரத்தில் ஏற்றம் பெற்றுள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 434 கோடி டாலா் (ரூ.32,550 கோடி) அதிகரித்து 58,121 கோடி டாலரை எட்டியுள்ளது.
இதற்கு முந்தைய ஏப்ரல் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 242 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 57,687 கோடி டாலராக காணப்பட்டது. அதேபோன்று, மாா்ச் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்திலும் செலாவணி கையிருப்பானது 299 கோடி டாலா் சரிந்து 57,928 கோடி டாலா் என்ற அளவில் இருந்தது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) அதிகரித்ததன் காரணமாகவே ஏப்ரல் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது கணிசமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.
கணக்கீட்டு வாரத்தில், எஃப்சிஏ 302 கோடி டாலா் உயா்ந்து 53,945கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களையொட்டி அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபாடு ஏற்படுகிறது.
கணக்கீட்டு வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 130 கோடி டாலா் அதிகரித்து 3,532 கோடி டாலராக இருந்தது.
சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 60 லட்சம் டாலா் அதிகரித்து 149 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 3 கோடி டாலா் உயா்ந்து 495 கோடி டாலராகவும் இருந்ததாக ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நடப்பு 2021-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 59,018 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.