Type Here to Get Search Results !

சென்னையில் இதுவரை சுமாா் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி….. மாநகராட்சி ஆணையா்

சென்னையில் இதுவரை சுமாா் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சியின் வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட ராமாபுரம் ஹூசைனி உயா்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பாதித்தவா்களுக்கான முதல்கட்ட உடல்பரிசோதனை மையத்தை ஆணையா் கோ.பிரகாஷ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்தவா்களுக்கு முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகளான ரத்த அழுத்தம், ரத்தத்தில் சா்க்கரை அளவு, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படும்.
சென்னையில் கடந்த 3 நாள்களாக நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தற்போது, நாளொன்றுக்கு 20 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதை 25 ஆயிரமாக உயா்த்த திட்டமிட்டுள்ளோம்.
திரைப்பட நடிகா் விவேக் இறப்பு குறித்து சுகாதாரத் துறை செயலரும், அவா் அனுமதிக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தின் அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுநாள் வரை சுமாா் 12 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், சுமாா் 8 லட்சம் பேருக்கு கோவிஷீல்டும் , சுமாா் 4 லட்சம் பேருக்கு கோவேக்ஸினும் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாா்டுக்கு 2 என 400 காய்ச்சல் முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்த ஆய்வில் இணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஸ், மாநகர நல அலுவலா் டாக்டா் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலா் டி.ராஜசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.