Type Here to Get Search Results !

10 நாட்களில் திமுக கோயில் சொத்துக்களில் கை வைப்பதற்கு குறி..‌‌

 

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும் சொத்துக்களில் கை வைப்பதும் மட்டும் எப்போதும் மாறுவதில்லை. முதலில் கோவில்களின் வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்து கணக்காய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அவர் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்தனர் திமுகவினர்.

குறிப்பாக ஒரு அமைச்சர் இதில் பெரிதும் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது தனது வேலையில் தான் கவனம் செலுத்தப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டு விட்டு அமைதி அடைந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு பூலோக வைகுண்டம் என்ற சிறப்புடன் அறியப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் தலைமை மடாதிபதி, ஸ்ரீ ரங்க நாராயண ஜீயரை நியமிக்க அறநிலையத் துறை விளம்பரம் கொடுத்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்துக்களின் சடங்கு, சம்பிரதாயங்களில் தலையிட அறநிலையத் துறைக்கு உரிமை இல்லை என்று அனைவரும் கொந்தளிக்க, விளம்பரம் திரும்பப் பெறப்பட்டதோடு அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இது பற்றி கலந்தாலோசிக்கப்படும் என்றும், ஈஷா குறித்து கேட்கப்பட்ட போது ‘தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மழுப்பலாகவும்‌ பதிலளித்து பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

இந்நிலையில் தமிழக அரசின் தொழில் துறை நிலம் கையகப்படுத்துதலுக்காக ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் சுவாமி மற்றும் சீனிவாச பெருமாள் சுவாமி கோவில்களுக்கு சொந்தமான 2.37 ஏக்கர் நிலங்களை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இரண்டாவது அலகு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கையகப்படுத்த உள்ளதாகவும் ஆட்சேபணை இருந்தால் நிலத்தின் உரிமையாளர்கள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக வீரசோழபுரம் கோவில் நிலத்தை அரசு கையகப்படுத்திய போது, கோவில் நிலங்களை கோவில் பயன்பாடுகளைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. அப்படி இருந்தும் மீண்டும் கோவில் நிலத்தை அரசு பொதுத் துறை நிறுவனத்துக்காக கையகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இது போக இந்த 2.37 ஏக்கர் நிலம் முழுவதுமே நஞ்சை நிலம். எதிர்க் கட்சியாக இருந்த போது திமுக மீத்தேன் மற்றும் கெயில் திட்டங்களை கடுமையாக எதிர்த்து விட்டு தற்போது விவசாய நிலத்தை கையகப்படுத்துவது மட்டுமல்லாமல் அதில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப் போகிறோம் என்று கூறியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பையும் இந்துக்களின் உணர்வுகளையும் மதித்து இந்து அறநிலையத் துறை இந்த கையகப்படுத்தலுக்கு இடமளிக்கக் கூடாது என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.