Type Here to Get Search Results !

14 நாட்கள் ஊரடங்கை இன்று ஒரு நாளில் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதோ….!…?

14 நாட்கள் ஊரடங்கை இன்று ஒரு நாள் முழு கடை திறப்பு ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதோ என்ற அச்சத்தை மக்கள் கூட்டம் விதைத்துள்ளது.

அடுத்த ஒரு வாரம் மளிகை கடை காய்கறி என எந்த கடையும் திறக்காது என்ற அறிவிப்பும், திடீரென எல்லா கடைகளையும் திறக்கலாம் என்ற அனுமதியும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மக்களை மொத்தமாக கடைகளுக்கு படை எடுக்க வைத்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, வேலூர், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, கோவை, நாகர்கோவில், ஓசூர், தஞ்சை, திண்டுக்கல் என அத்தனை மாநகராட்சிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் கூட்டமாக குவிந்து வேண்டிய மளிகை பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

சலூன்கடையிலும் கூட்டம்

சிறிய நகரங்களிலும், பேரூராட்சிகளிலும், பெரிய மளிகை கடைகளில், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.மளிகை கடை மட்டுமல்ல காய்கறி கடைகளிலும், சலூன் கடைகளிலும் இதற்கு முன் இப்படி கூட்டத்தை பாத்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கொரோனா என்ற பெருந்தொற்றை மறந்து மக்கள் குவிந்து வேண்டியதை வாங்கி வருகிறார்கள்.

கொரோனா நிச்சயம்

ஒரே நாளில் எல்லா ஊர்களிலும் மக்கள் , மொத்தமாக பொருட்களை வாங்கி குவிப்பதால், சில பொருட்கள் சிலருக்கு கிடைக்காமல் போகும் நிலையும் காணப்படுகிறது. காய்கறி கடைகளிலும், காய்கறி சந்தைகளிலும் மக்கள் தங்களை மறந்து சமூக இடைவெளி இல்லாமல் வேண்டியதை வாங்குவதை பார்க்கும் போது, இனி மக்களை கொரோனா நிச்சயம் என்ன பாடுபடுத்த போகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

மீன் மார்க்கெட்டுகள்

கறிக்கடைகள் இனி எப்போதுமோ செயல்படாமல் போகுமோ என்கிற அளவிற்கு கூட்டம் தாறுமாறாக உள்ளது. மீன்மார்க்கெட்டுகளிலும், இதே நிலை தான். 14 நாட்கள் ஊரடங்கு மூலம் மக்கள் ஓரளவு கட்டுப்பாட்டுடன் அமைதியாக வீடுகளில் இருந்தனர். ஆனால் இன்று ஒரு நாள் கடை திறப்பு அதை ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டது.

அடுத்த வாரம் என்னாகும்

இது தவிர பேருந்துகளில், சென்னை, கோவை, திருப்பூர் உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள் பலர் சமூக இடைவெளியை சுத்தமாக மறந்து எப்படியும் ஊருக்கு போனால் போதும் என்று பயணிக்கிறார்கள். பலர் சொந்த வாகனங்களில் சாரை சாரையாக பயணிக்கிறார்கள். இவர்களில் பலரும் கிராமபுறங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் எத்தனை பேர் கொரோனா அறிகுறி உடன் இருந்தார்கள். இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது தவிர பேருந்தில் எத்தனை பேர் கொரோனா அறிகுறியுடன் இருந்தார்கள் என்பதும் தெரியவில்லை. இவர்களால் என்ன மாதிரியான தாக்கம் இனி வரும் நாட்களில் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

ஊரங்கு பலன் இல்லை

மக்கள் சமூக இடைவெளியை மறந்து, கூட்டம் கூட்டமாக சென்று வேண்டியதை வாங்கி வருகிறார்கள்.கையோடு கொரோனாவை வாங்கி வரும் அபாயம் இல்லாமல் இல்லை. முககவசம் அணிந்திருந்தாலும், இதுபோன்ற அசாதாரண கூட்டங்கள் மக்களிடையே கொரோனவை அதிகப்படுத்துமே தவிர குறைக்காது என்பதே மருத்துவர்களின் கருத்து. இன்று ஒரு நாள் கடை திறப்பு 14 நாட்கள் ஊரடங்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதோ என்ற அச்சத்தை விதைத்துள்ளது. மக்களின் அஜாக்கிரதையால் இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.