Type Here to Get Search Results !

தமிழகத்தில் மே மாதம் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு….

 

தமிழகத்தில் மே மாதம் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய் பரவல் மிகவும் அதிகரித்ததன் காரணமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்து இருந்தது.

ஊரடங்கு முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் சட்டசபை உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறார். அப்போது முழு ஊரடங்கை, நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் வழங்குவது என்பது போன்ற விஷயங்கள் பற்றி ஆலோசிக்க உள்ளார்.

இந்த நிலையில்தான் மே மாதம் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக நோய் பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் சென்னையை தொடர்ந்து கோவை, நெல்லை , தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களிலிருந்தும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தாண்டிச் சென்றுவிட்டது. இப்படியான நிலையில் ஊரடங்கை தளர்த்தினால் நோய் பரவல் மிக மிக அதிகரிக்கும். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவாகும் என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாகத்தான் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், உற்பத்தி துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு லாக்டவுனில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன் இதுபற்றி கூறுகையில், முழு ஊரடங்கு பலன் காரணமாகத்தான் கடந்த சில நாட்களாக நோய் தொற்று குறைய ஆரம்பித்திருக்கிறது. இது இன்னமும் குறைய வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தக் கூடிய காலகட்டத்தில், மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் பயன் உள்ளதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.