Type Here to Get Search Results !

அடுத்த… எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகளுக்கான மல்லுக்கட்டு

 
அதிமுகவில் ஒருவழியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றிவிட்டார். இப்போது அடுத்த பஞ்சாயத்தாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகளுக்கான மல்லுக்கட்டு தொடங்கி இருக்கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கே வேண்டும் என ஓபிஎஸ்- ஈபிஎஸ் இருவரும் போட்டியிட்டனர்.

இதனால் சட்டசபை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கும் நிலைமைக்குப் போனது.

ஒருகட்டத்தில் எடப்பாடி பழனிசாமிதான் எதிர்க்கட்சித் தலைவர் என அவரது ஆதரவாளர்கள் தன்னிச்சையாக முடிவு செய்தனர். ஓபிஎஸ் முன்மொழிந்த மாஜி சபாநாயகர் தனபாலை கூட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மிகவும் அதிருப்தியுடன் படுசோகமாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினார் ஓபிஎஸ்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்துவதில் முனைப்பாக இருந்து வருகிறது. இதனாலேயே ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்று பேசியும் பார்த்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது கூட, அண்ணே நீங்க எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்கிறதுதான் சரி.. அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ஆனாலும் ஓபிஎஸ் எந்த பதிலும் சொல்லவில்லை.

எடப்பாடி தரப்பு மீது இருக்கும் கோபத்தைக் காட்ட அவ்வப்போது அதிமுக லெட்டர் ஹெட் இல்லாத அறிக்கைகளை வெளியிட்டு வெறுப்பேற்றுகிறார் ஓபிஎஸ். இந்த நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா பதவிகள் யாருக்கு என்கிற விவாதம் அதிமுகவில் எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி ஓபிஎஸ்-க்கு என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் அவரது ஆதரவு கோஷ்டியினரோ, ஓபிஎஸ் ஏற்கவில்லை எனில் தென்மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு துணைத் தலைவர் பதவியை கொடுத்துவிடலாம் என்கிற யோசனையை கூறியுள்ளனர். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அப்படி செய்தால் கட்சி பிளவுபடுவதற்கு நாமே வழிஏற்படுத்தி கொடுப்பதாகிவிடும் என்று சொல்லிவிட்டாராம்.
இதனைத் தொடர்ந்து கொறடா பதவி யாருக்கு என்பதில் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், கேபி முனுசாமி இடையே போட்டி நிலவுகிறது. வடமாவட்டத்தைச் சேர்ந்த தமக்கு கொறடா பதவி வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறாராம் கேபி முனுசாமி. டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தமக்கே கொறடா பதவி எளிதாக கிடைக்கும் என கணக்குப் போட்டு காத்திருக்கிறாராம் வைத்திலிங்கம்.

இவர்கள் இருவரும் அல்லாமல் திண்டுக்கல் மாவட்ட சீனியர்களான சீனிவாசனும் நத்தம் விஸ்வநாதனும் ஆளுக்கு ஒரு லாபியில் இறங்கி இருக்கிறார்களாம். ஓபிஎஸ் அணியில் இருந்த நத்தம் விஸ்வநாதன் இப்போது முற்று முழுதாக எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியிருக்கிறார். இதனால் தமக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும் என நம்பிக்கையோடு இருக்கிறாராம் நத்தம் விஸ்வநாதன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.