Type Here to Get Search Results !

சென்னையில் முழு ஊரடங்கை கடுமையாக்க ட்ரோன் மூலம் கண்காணிக்க காவல்துறை திட்டம்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்றுமுதல் கடைபிடிக்கப்படுவதால், தேவையின்றி வெளியே நடமாடுபவர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க சென்னை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு 24-ம் தேதி (இன்று) வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் சென்னை பெருநகரில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து மற்றொரு காவல் எல்லைக்குள் நுழைவதற்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது. சென்னை பெருநகரில் அனைத்து காவல் நிலைய சரகங்களையும் ஒருங்கிணைத்து முக்கிய சந்திப்புகள், சரக எல்லைகள் என 153 வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கப்பட்டது.
205 இருசக்கர ரோந்து வாகனங்களிலும், 309 நான்கு சக்கர ரோந்து வாகனங்களிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தடையை மீறி இயக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்களுக்கு அபராதம் விதித்ததோடு தொடர்புடைய வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். தற்போது கரோனா பரவல் ஓரளவுக்கு தணிந்தாலும் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து தமிழக அரசு இன்று முதல் மேலும் ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதையடுத்து மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு பணிகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ரோந்து மற்றும் கண்காணிப்பை மீண்டும் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகள், சாலை சந்திப்புகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதுடன், தெருக்களுக்குள் சென்றும் கண்காணிக்க போலீஸாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ட்ரோன் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தடைகளை மீறி வெளியே இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை முழு ஊரடங்கு முடிந்த பின்னர் நீதிமன்றம் மூலமே திரும்ப பெற முடியும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க பொதுமக்கள் தமிழக அரசின் ஊரடங்கு வழிகாட்டுதல் விதிமுறைகளை கடைபிடித்து கரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.