Type Here to Get Search Results !

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல்…. சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.தீர்மானம்….. வாக்கெடுப்பில் இந்தியா விலகல்….!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் எற்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா விலகியது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த 2 வாரத்துக்கு முன்பு கடுமையான மோதல் மூண்டது. ஹமாஸ் படையும், இஸ்ரேல் ராணுவ படையும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். வான்வழி மூலம் குண்டு மழை பொழிந்தனர்.
வானளாவிய கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. சர்வதேச ஊடக நிறுவன கட்டிடங்கள் சீர்குலைக்கப்பட்டன. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காஸா நகரம் பற்றி எரிந்தது. 11 நாட்கள் கொடூரமாக நடைபெற்ற இந்த போர் ஐ.நா, அமெரிக்கா ஆகியவற்றின் தலையீட்டால் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இந்த சண்டையில் 200-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிர்கதியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரினால் காஸா உள்ளிட்ட இடங்களில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து வெளிப்படையான சர்வதேச விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பு முடிவு செய்தது.
இந்த சர்வதேச விசாரணையை தொடங்குவது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் ஐ.நா.வில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. 24 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. இறுதியில் பெரும்பான்மை அடிப்படையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போரில் எற்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை கண்டித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது வெட்கக்கேடான தீர்மானம் என்றும் ஐ.நா.வின் அப்பட்டமான இஸ்ரேல் எதிர்ப்புக்கான சமீபத்திய எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.