Type Here to Get Search Results !

பாஜக பாமக நினைவூட்டல்…. ஸ்டாலின் முன்பு வைத்த கோரிக்கையை ஏன் நடத்தவில்லை

 

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவியபோது, உயிர்ப் பலி அன்றாடம் 30 முதல் 40 வரை இருந்தது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினும், அவருடைய கூட்டணி கட்சித் தலைவர்கள் 10 பேரும் ஒன்றாக இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.

அதில், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர். கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என்பதுதான் அது.

இந்த நிலையில், அதே ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனாவால் பலியானோரின் அன்றாட எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

இதைத்தொடர்ந்து, ‘மருத்துவ முன் களப்பணியாளர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததால் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்தது.

அப்போது, “இந்தத் தொகை போதாது, குறைந்தபட்சம் 50 லட்ச ரூபாயாவது வழங்கவேண்டும்” என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்தின.

கொரோனாவால், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்பதும், முன் களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாயும் வழங்கவேண்டும் என்பதும் திமுக கூட்டணியின் தொடர் கோரிக்கையாக இருந்து வந்தது.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் குடும்பத்தினர் அனைவருக்குமே ஒரு கோடி ரூபாய் கொடுப்பது என்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அப்போதைய அதிமுக அரசு அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக கொரோனாவை கட்டுப்படுத்தி, உயிரிழப்பை தடுப்பதில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தியது.

இந்த நிலையில்தான், கடந்த மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து திமுக ஆட்சியை கைப்பற்றியது. இதன் பின்பு, முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலினிடம், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக பாஜக தலைவர் முருகன், நைனார் நாகேந்திரன் எம்எல்ஏ
மூவரும் கடந்த ஆண்டு ஸ்டாலின் வைத்த கோரிக்கைகளை தற்போது அவருக்கு நினைவூட்டி இருக்கின்றனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் தமிழகத்தில் தற்போது தீவிரமாக உள்ளதால் இந்தக் கோரிக்கைகளை அவர்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு வைத்துள்ளனர்.

பாஜக தலைவர் முருகன் கூறும்போது, “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றை பேசிவிட்டு ஆளுங்கட்சியாக இருக்கும்போது மாற்றி பேசுவது அழகல்ல. ஆகவே முதல்வர், தான் அளித்த வாக்குறுதிப்படி உயிரிழந்த முன் களப்பணியாளர் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும் உயிரிழக்கும் முன்களப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக அரசு
வழங்க உத்தரவிட்ட 25 லட்ச ரூபாய், நிவாரணத் தொகைதான் முதல்வர் ஸ்டாலினின் புதிய அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருப்பதாகவும் முருகன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதாவது, “அன்று நீங்கள் சொன்னதை, தற்போது நிறைவேற்ற வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. எனவே கொரோனாவால் உயிரிழக்கும் முன் களப்பணியாளர் குடும்பத்தினருக்கும் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்குங்கள்” என அவர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறும்போது, “தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் கிராமசபை கூட்டங்கள் நடத்தியபோது கொரோனா கால வாழ்வாதார நிதியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதாது. 5 ஆயிரம் ரூபாயாவது தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனவே இப்போது அவருடைய தலைமையில் அமைந்துள்ள திமுக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் கொரோனா பாதிப்பு முடியும் வரை. ரேஷன் கடையில் சர்க்கரை, சமையல் எண்ணெய்,பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்கள் இலவசமாகக் கொடுக்க வேண்டும்” என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “மருத்துவ முன் களப்பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு, வழங்கப்பட்டு வரும் 25 லட்ச ரூபாய் என்பதை
50 லட்சமாக அதிகரிக்கவேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், “கொரோனா முதல் அலையில் இருந்தே தமிழகம் இன்னும் மீளாத நிலையில், இரண்டாவது அலை சுனாமி போல் வந்து வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது. எனவே திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்பு, டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு ஆகிய இரண்டையும் உடனடியாக நிறைவேற்றிடவேண்டும். தொடர்ந்து விலை ஏற்றம் இல்லாதவகையில் வரியையும் திருத்தியமைக்கவேண்டும்” என்று வற்புறுத்தி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “போதிய வருமானமின்றியும் தொழில் முடக்கத்தாலும் வாழ்வாதாரம் இழந்து அன்றாடப் பிழைப்பு கூடக் கேள்விக்குறியாகி நிற்கும் ஏழை எளிய நடுத்தர மக்களின் பெருஞ்சுமையில் சிறிதளவைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு அடுத்து வரும் 2 மாத காலத்திற்கு மின்கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்து உத்தரவிட்டு, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குக் குறைந்தபட்ச ஆறுதலை வழங்கிட வேண்டும்” என்று கோரிக்கை புதிதாக ஒரு வைத்திருக்கிறார்.

கடந்த ஆண்டு திமுகவுடன் இணைந்து, தீர்மானம் நிறைவேற்றிய அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தது, தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வெளிப்படையாக எந்த வேண்டுகோளும் விடுத்ததாக தெரியவில்லை.

அதேநேரம் பாஜக, பாமக ஆகியவை தக்க நேரத்தில், திமுக வைத்த பழைய கோரிக்கைகளை சுட்டிக்காட்டி இருக்கின்றன. அவற்றை தமிழக அரசு நிறைவேற்றுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.