Type Here to Get Search Results !

அன்று எதிர்க்கட்சி ஸ்டாலின் தடுப்பூசி போட வேண்டாம் சொன்னதால் இன்று அதிகரிப்பு... எடப்பாடியார் அதிரடி பேச்சு

 

தமிழக அரசின் மெத்தன போக்கினால் தான் இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு மருத்துமனையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை அரசு குறைத்து காட்டுகிறது. இறப்பு விவரத்தை வெளிப்படையாக அரசு வெளியிட வேண்டும். அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாடுகளில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

ஊரடங்கு அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால், கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் மெத்தனத்தால்தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், ஏற்கனவே அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்ட 3800 என்ற படுக்கை வசதி மட்டுமே தற்போது உள்ளது. ஆனால் 11 ஆயிரம் படுக்கைகள் உள்ளதாக அரசு பொய்க்கணக்கு காட்டுகிறது.

இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தடுப்பூசி கண்டிபிடிக்கப்பட்டது குறித்து அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தார். தடுப்பூசியை பிரதமர் போட்டுக்கொள்ளவில்லை, முதலமைச்சர் போட்டுக்கொள்ளவில்லை, ஆனால் அதை மக்கள் மட்டும் எப்படி போடுவது என அப்போது சந்தேகம் எழுப்பினார். ஆனால் அன்று அப்படி பேசிய ஸ்டாலின் இப்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பேசுகிறார். எனவே இப்படிப்பட்ட கருத்துக்களை கூறி அப்போது பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார் அவர்.

தடுப்பூசி போட வேண்டும் என்று இன்றைக்கு பேசும் ஸ்டாலின் இதை அன்றைக்கே சொல்லியிருந்தால் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டு இருப்பார்கள். ஆனாலும் நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருந்தோம். பத்திரிக்கை செய்தி வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். பல ஊடகங்களிலும் செய்தி வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

இப்படி பல வழிகளில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்மோத். ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்தவர்கள், தடுப்பூசி குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியதனால் அச்சத்தின் காரணமாக பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை. அதனால் தான் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.