Type Here to Get Search Results !

புதைந்திருந்த முதுமக்கள் தாழிகள் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டதில் வெளியில் தெரிந்தன…..

 

வைகுண்டம் அருகே வசவப்பபுரம் பரம்பு பகுதியில் மண்ணுக்குள் புதைந்திருந்த ஏராளமான முதுமக்கள் தாழிகள் மற்றும் பழங்காலப் பொருட்கள், மழையால் மண் அரிப்பு ஏற்பட்டதில் வெளியில் தெரிந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள், ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட வசவப்பபுரம் கிராமம் பெரிய பரம்பு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதில், மண்ணுக்குள் புதைந்திருந்த ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள் வெளியே தெரிகின்றன.

தாழிகளுக்குள் விதவிதமான ஜாடிகள், இரும்பு ஆயுதங்கள், விளக்கு தூபம் உள்ளிட்ட பொருட்கள் காணப்படுகின்றன.

வைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் இவற்றை பார்வையிட்டார்.

அலெக்ஸாண்டர் இரியா

தொல்லியல் ஆர்வலரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, ‘தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் புதையுண்டு கிடக்கின்றன. இதனை, 1902- ல் ஆய்வு செய்த அறிஞர் அலெக்ஸாண்டர் இரியா கண்டுபிடித்தார். தாமிரபரணி கரையோரம் மொத்தம் 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த, 37 இடங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று, 100 வருடங்களுக்கு முன்பே அவர் வரைபடம் தயாரித்து ஆவணப்படுத்தியுள்ளார். அதில் வசவப்பபுரம் பரம்பு எழுதப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டர் இரியா கூறிய 37 இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

அதன் அடிப்படையில் ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், தாமிரபரணி கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும், அதிகாரி நியமனமும் செய்துள்ளனர். ஆனால், கரோனா தொற்று காரணமாக இந்த பணிகள் தடைபட்டுள்ளன.

இந்த ஆண்டில் செப்டம்பர் வரை அகழாய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே, முதல் கட்டமாக வசவப்பபுரம் பரம்பு பகுதியை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, அடுத்த நிதியாண்டில் அகழாய்வு செய்ய வேண்டும்’ என்றார் அவர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.