Type Here to Get Search Results !

ஸ்டாலினை சைலண்டாக வச்சு செய்யும் ஓபிஎஸ்.. திணறும் திமுக அரசு…..!

போக்குவரத்து தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
உலகம் ஒரு குடும்பம் என்னும் தத்துவத்தை அடைய உறுதுணையாக இருப்பதிலும், மக்களை இணைப்பதிலும், நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், இன்றியமையாததாக விளங்குவது போக்குவரத்து என்றால் அந்த போக்குவரத்து சேவையை செவ்வனே மேற்கொள்பவர்கள் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள்.  இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நோயின் தாக்கம் கொடூரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் மருத்துவப்  பணியாளர்களுக்காகவும், சுகாதார பணியாளர்களுக்காகவும், அத்தியாவசிய துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் பேருந்துகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. 
அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களின் பணி பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியது. தங்களது உயிரை பற்றி சற்றும் கவலைப்படாமல் பொதுமக்களுக்கு சேவை புரிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பணியாற்றும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பலர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்து மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருடன் போக்குவரத்து தொழிலாளர்களையும் முன்களபணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்றும், அப்படி அறிவிக்கப்பட்டால் தான் முன் களப் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகள் மற்றும் சலுகைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் என்றும் 31-5-2021 உடன் காலாவதியாக இருக்கும் மருத்துவ காப்பீட்டினை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டை விரிவுபடுத்த வேண்டும் என்றும், பணி ஓய்வு மற்றும் விருப்ப பணி ஓய்வு பெற்று மற்றும் உயிரிழந்த ஊழியர்களின் ஓய்வு காலப் பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஒழுங்கு நடவடிக்கை நீதிமன்றம் வழக்கு போன்ற காரணங்களினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க  கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. 
இது சம்பந்தமாக அந்த அமைப்பு அரசுக்கு கடிதம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. இவர்களுடைய கோரிக்கைகளை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அவற்றில் நியாயம் இருப்பது கண்கூடாக தெரிகிறது. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து அவர்களை முன் களப்பணியாளர்களாக அறிவிப்பது உட்பட அனைத்து கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து அதற்காக ஆணைகளை வெளியிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.