Type Here to Get Search Results !

ஜவாஹிருல்லா திமுக எம்எல்ஏவா எப்படி இருக்க முடியும்….? தேர்தல் ஆணையத்துக்கு செல்லும் ஹெச்.ராஜா….!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்றது அல்-உம்மா இயக்கம்தான். அந்த இயக்கத்தில் ஜவாஹிருல்லா உறுப்பினராக இருந்தவர்தான். ஜவாஹிருல்லா குற்றம் செய்ததாக நான் சொல்லவில்லை. இவர் அல்-உம்மா உறுப்பினர் மட்டுமல்ல. அல்-உம்மாவை தொடங்கியதே எஸ்.எம்.பாஷாவும், ஜவாஹிருல்லாவும்தான். அல் -உம்மா தடை செய்யப்பட்டது. அதற்குக் காரணம் கோவை குண்டுவெடிப்பு சம்பவம்.
அன்று அல்-உம்மாவை தடை செய்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி. அந்த இயக்கத்தோடு தொடர்புடையவரைதான் திமுக  இன்று பாபநாசத்தில் நிறுத்தியது. திமுகவின் கட்சி விதிப்படி அக்கட்சியின் உறுப்பினருக்கு அந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட சீட்டு கொடுக்கலாம். அதனால்தான் அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கொறடாவுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனால், ஜவாஹிருல்லா திமுகவின் உறுப்பினராக இருக்க முடியாது. அவருக்கு திமுகவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்படும்.
இந்து அறநிலையத்துறையில் பல ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதை மீட்பது குறித்து நான் பேசினேன். உடனே அதை எதிர்கொள்ள முடியாமல் ஹெச்.ராஜா தவறு செய்து விட்டதாக பதிவு போடுகிறார்கள், அறிக்கை வெளியிடுவதெல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசின் முதல் பட்ஜெட் வரட்டும். பிறகு பி.டி.ஆரின் நிதி ஆளுமை பற்றியெல்லாம் பேசுவோம். ஜக்கி வாசுதேவை அவர் மரியாதை குறைவாக பேசியதைத்தான் நான் கண்டித்தேன். பி.டி.ஆர். தியாகராஜன் பூர்வீகம் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. எதற்காக இந்து கோயிலுக்கு எதிராக பேச வேண்டும் என்றுதான் கேட்கிறேன். 
இவர்களுடைய எந்த மிரட்டலுக்கும் நான் பயப்படமாட்டேன்” என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் ஃபேஸ்புக்கில் ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில், “திமுகவின் கட்சி விதிகளின்படி வேறு ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தாலோ அல்லது மத அமைப்பில் இருந்தாலோ அவர் திமுகவின் உறுப்பினராக இருக்க முடியாது. ஆனால், ஜவாஹிருல்லா திமுகவின் சின்னத்தில் போட்டியிட ஃபார்ம் பி ஒதுக்கும்போது அதில் அவர் திமுகவின் உறுப்பினர் என்று கூறி அவருக்கு உதயசூரியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் புகார் அளிக்க இது ஒரு தகுதியான வழக்கு ( It is a fit case for election petition)”. என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.