அமெரிக்கவைச் சேர்ந்த, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமான, ‘வாட்ஸ் ஆப்’ சமூக வலைதளம், உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும், 40 கோடி பேர், இதைப் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், தன் பயனாளிகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக, புதிய கொள்கையை, வாட்ஸ் ஆப் சமீபத்தில் அறிவித்தது.பிப்., 8ம் தேதிக்குள் அந்த கொள்கையை ஏற்காவிட்டால், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியாது என்றும், அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதற்கு, இந்தியா உட்பட பல நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாற்று சமூக வலை தளங்களுக்கு, பலர் மாறி வருகின்றனர்.இதையடுத்து, ‘புதிய கொள்கையை அமல்படுத்துவது, மே, 15 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உள்ள சந்தேகங்கள், தவறான புரிதலுக்கு சரியான விளக்கம் அளிக்கப்படும்’ என, வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது.