புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. முதல்வர் நாராயணசாமி அவரை முன்னிலைப்படுத்திக் கொள்வதையும், அவருடைய வளர்ச்சியையும் மட்டுமே பார்த்தார் என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- புதுச்சேரிக்கு வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி வருகை தருகிறார். அரசு விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டம் என இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ஜிப்மர் அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக, சாலை மேம்பாட்டு திட்டம், சாகர் மாலா திட்டம், மாணவர் விடுதி, கேல் இந்தியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டங்கள் தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சியும் ஏற்படவில்லை. முதல்வர் நாராயணசாமி அவரை முன்னிலைப்படுத்திக் கொள்வதையும், அவருடைய வளர்ச்சியையும் மட்டுமே பார்த்தார். மக்களுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் அவர் எதையும் செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி சோலை நகர் மீனவர் பகுதிக்கு வந்தபோது ஒரு மூதாட்டி கூறிய குற்றச்சாட்டை முதல்வர் மறைத்துவிட்டு தவறான தகவலை மொழிப்பெயர்த்து ராகுல் காந்தியிடம் கூறுகிறார். இந்த செயலில் இருந்தே முதல்வரின் ஏமாற்று வேலை தெரிந்துவிட்டது. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு வீழ்ச்சி அடைந்துவிட்டது. வருகிற மே மாதத்தில் முறைகேடு, ஊழல் இல்லாத நல்ல நிர்வாகத்துடன் கூடிய நல்லாட்சி அமையும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின்போது மாநிலங்களவை எம்.பி. ராஜீவ் சந்திர சேகர் மற்றும் மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தார்.