எந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர். இந்த மண்ணின் மைந்தர். அதனால் தான் இந்த பணியை விஜயபாஸ்கரிடம் கொடுக்க நினைத்தேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சியில், அடிக்கல் நாட்டு விழா நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். இந்த விழாவில் 6,941 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி – தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல் கட்டம்; 3,384 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி உப வடிநில பாசன உள்கட்டமைப்புகள் புனரமைக்கும் பணி ஆகியவற்றிற்கு, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி;- நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே தமிழகம் சிறந்து விளங்குகிறது. பொதுப்பணித்துறைக்கு எண்ணற்ற பொறுப்புகள் உள்ளன. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத அணைகள், குளங்கள், ஏரிகள் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. பல்வேறு தடுப்பணைகள் கட்டி வருகிறோம். நாங்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கிறது என்பதற்கு ‛நடந்தாய் வாழி காவரி‛ திட்ட அனுமதியே சாட்சி என்றார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். திமுக ஆட்சியில் அனுமதி தந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு துணையோடு தடுத்தது அதிமுக அரசு. காவிரி- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி என முதல்வர் தெரிவித்துள்ளார். என் வாழ்நாள் பிறவிப்பலனை அடைந்ததாக நான் உணர்கிறேன். என் வாழ்வின் மறக்கமுடியாத நாள் இன்று. ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என்றார்.
மேலும், எந்த பணி கொடுத்தாலும் சூப்பராக செய்ய கூடியவர். இந்த மண்ணின் மைந்தர். அதனால் தான் இந்த பணியை விஜயபாஸ்கரிடம் கொடுக்க நினைத்தேன் என விஜயபாஸ்கருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.