லடாக்கில் அமைந்துள்ள, இந்திய – சீன எல்லைப் பகுதியில், இருதரப்பு வீரர்களும் குவிக்கப்பட்டிருப்பதால், பல மாதங்களாக, பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து, இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே, பேச்சு நடந்து வருகிறது. எனினும், இந்த விவகாரத்தில், உறுதியான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை.
இதுகுறித்து, சில தினங்களுக்கு முன், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது : எங்களுக்கு போர் நடக்கவேண்டாம். அனைவரின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியம். எனினும், ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் நாட்டின் பெருமையை சீர்குலைக்க யாரேனும் முயற்சித்தால், அவர்களுக்கு, எங்கள் வீரர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்நிலையில், உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:இந்திய – சீன எல்லைப் பகுதியில், நம் ராணுவ வீரர்களின் கவர்ந்திழுக்கும் செயல்திறன், நாட்டின் மன வலிமையை அதிகரித்துள்ளது. மேலும், நாட்டு மக்களை தலை நிமிர வைத்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராணுவ தலைமை தளபதி நரவானே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியாவுக்கு, அரசுமுறைப் பயணமாக வந்துள்ள, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப்குமார் கியாவாலி, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து, ராஜ்நாத் சிங், ‘டுவிட்டரில்’ குறிப்பிட்டுள்ளதாவது:நேபாள வெளியுறவுத் துறை அமைச்சருடன் நடந்த சந்திப்பு, நல்ல முறையில் அமைந்தது. இந்தியா – நேபாள உறவு, இருதரப்பு அரசுகளோடு மட்டும் முடிந்துவிடாது; இருநாட்டு மக்களாலும், அந்த உறவு மேம்படுகிறது.
இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.