Type Here to Get Search Results !

தமிழக வீரர் நடராஜன் புதிய சாதனை: ஒரு தொடரில் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்தியர்

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
சேலம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் 2020 போட்டியில் 16 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி – 8.02. இந்த வருட ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசினார் நடராஜன். அதில் 58 ரன்கள் மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் முதலில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக நடராஜன் தேர்வானார். எனினும் நடராஜனை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அதிகமாகின. பும்ராவுடன் இணைந்து கடைசி ஓவர்களில் நடராஜன் பந்துவீசினால் ஆஸி. அணிக்கு நெருக்கடி தர முடியும் எனப் பலரும் எண்ணினார்கள்.
எல்லோருடைய ஆசையும் நிறைவேறியுள்ளது. ஒன்றல்ல, மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி சாதனை செய்துள்ளார் நடராஜன்.
தமிழகச் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து விலகினார். இதனால் நடராஜன், டி20 அணியில் முதலில் சேர்க்கப்பட்டார். ஒருநாள் தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் சைனிக்குக் காயம் ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். கடைசியில் சைனிக்குப் பதிலாக மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் இந்திய அணியில் இடம்பெற்றார். இதன்பிறகு மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாடினார். ஐபிஎல் போட்டியில் திறமையை நிரூபித்ததால் இந்திய அணி வீரராக முன்னேறியுள்ளார் நடராஜன்.
இதுவரை ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெற்ற ஒரு ஒருநாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளும் மூன்று டி20 ஆட்டங்களில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டி20 தொடரை இந்திய அணி வென்றது. தொடர் நாயகன் விருதைப் பெற்ற பாண்டியா, நடராஜன் இவ்விருதுக்குத் தகுதியானவர் என்று கூறி பாராட்டினார்.
மெல்போா்ன் டெஸ்டின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளா் உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினார். இதனால் இந்திய அணிக்கான வலைப்பயிற்சிப் பந்துவீச்சாளராக இருந்த நடராஜன், இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானார்.
சிட்னி டெஸ்டில் பும்ரா, அஸ்வின், விஹாரி, ஜடேஜா ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டதால் பிரிஸ்பேன் டெஸ்டில் அவர்கள் இடம்பெறவில்லை. இதனால் 4-வது டெஸ்டில் நடராஜன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். அவருடன் இணைந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்.
இதன்மூலம் ஒரு தொடரில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியுள்ள முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை நடராஜன் பெற்றுள்ளார்.
ஐபிஎல் போட்டியின் போது நடராஜனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. எனினும் இதுவரை தன்னுடைய குழந்தையை நடராஜனால் பார்க்க முடியாத நிலை உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை முடித்துக்கொண்டு நேராக ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார் நடராஜன். அவருடைய இந்தத் தியாகத்துக்குக் கிடைத்த பரிசாக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.