Type Here to Get Search Results !

சசிகலாவை சென்று சந்திக்கும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுவார்கள்.. கூட்டத்தில் கடுமையாக எச்சரிக்கை

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏறக்குறைய அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஆஜராகியிருருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து காலை முதலே மாவட்டச் செயலாளர்கள் வர ஆரம்பித்தனர். முதல் ஆளாக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கட்சி அலுவலகம் வந்தார். பிறகு வரிசையாக கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் வர ஆரம்பித்தனர். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் வந்த பிறகே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்து புறப்பட்டார்.
இதே போல் ஓபிஎஸ்சும் அதிமுக தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார். வந்திருந்த மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் சக மாவட்டச் செயலாளர்களிடம் சின்னம்மா வந்த பிறகு என்ன ஆகும் என்கிற ரீதியில் ஆளுக்கு ஒரு தியரியாக கூறிக் கொண்டிருந்தனர். பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கட்சி தற்போது எடப்பாடி – ஓபிஎஸ் கட்டுப்பாட்டில் உள்ளது, சிறையில் இருந்து சின்னம்மா வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர். அதே சமயம் அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறிக் கொண்டார்கள்.
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வந்த உடன் கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் கே.பி.முனுசாமி தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலில் பேசியுள்ளார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று முனுசாமி கேட்டுக் கொண்டார். எவ்வளவு பேரை அழைத்து வர முடியுமோ அவ்வளவு பேரையும் அழைத்து வரவும் ஒரு மாநாடு போல் ஏற்பாடுகளை செய்யவும் முனுசாமி கேட்டுக் கொண்டார்.
இதே போல் பேசிய முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரும் கூட ஜெயலலிதா நினைவிடம் குறித்தே அதிகம் பேசியுள்ளனர். அத்தோடு 27ந் தேதி ஜெயலலிதா நினைவிடத்தை திறந்த பிறகு போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவில்லத்தை ஜனவரி 28ந் தேதி பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிப்பது என்று முடிவெடுத்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கூறியுள்ளார். இப்படி சசிகலா வெளியே வந்த பிறகு பெரும்பாலும் சிறிது நாட்களுக்கு ஜெயலலிதா தொடர்புடைய நிகழ்ச்சிகளை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளதை எடப்பாடியின் பேச்சுகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.
வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, தேர்தல் செலவுகள் குறித்தெல்லாம் எதுவும் பேசப்படவில்லை. முழுக்க முழுக்க ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா பற்றி மட்டுமே பேசியிருக்கிறார்கள். கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும் மாவட்டச் செயலாளர்கள் தரப்பில் இருந்து சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா வர உள்ள நிலையில் அது குறித்து எதுவும பேசவில்லை என்கிற ஆதங்கத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் முனுமுனுக்க ஆரம்பித்தனர். இதனை புரிந்து கொண்டு கே.பி.முனுசாமி மறுபடியும் மைக் பிடித்துள்ளார்.
ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்களோடு யார் தொடர்பு வைத்திருந்தாலும் கட்சி நடவடிக்கை எடுக்கும். எந்த காரணத்தையும் கூறி அவர்களோடு கட்சிக்காரர்கள் தொடர்பு கொள்ளக்கூடாது, அந்த தரப்பில் இருந்து தொடர்பு கொண்டால் உடனடியாக கட்சி மேலிடத்திற்கு தகவல் அளிக்க வேண்டும், இல்லை என்றால் நிச்சயயமாக கட்சியை விட்டு நீக்கப்படுவது உறுதி என்று முனுசாமி பேசியுள்ளார். சசிகலா என்று அவர் குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அவர் கூறியது சசிகலாவுடன் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதைத்தான் என்கிறார்கள்.

The post சசிகலாவை சென்று சந்திக்கும் கட்சி நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுவார்கள்.. கூட்டத்தில் கடுமையாக எச்சரிக்கை appeared first on தமிழ் செய்தி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.