Type Here to Get Search Results !

அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட 12 பேர்.... அவர்களது வாழ்வின் கடைசி நிமிடங்கள்....!

 


ஹைதராபாத்தைச் சேர்ந்த புவியியலாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டியும் அப்படித்தான் நினைத்திருந்தார், ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்ட போது என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்குள் தங்களை சேறும் சகதியுமாக தண்ணீர் சூழ்ந்து கொண்டது.  அவ்வளவுதான் முடிந்தது கதை என்று நினைத்திருக்கும் போதுதான், தங்களுடன் பணியாற்றியவரின் செல்லிடப்பேசியில் தொலைத்தொடர்பு சேவை இன்னமும் இருந்தது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவ்வாறு அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட 12 பேரில் ஸ்ரீனிவாஸ் ரெட்டியும் ஒருவர்.

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவா்களில் மேலும் 26 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 171 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 30 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

மரணத்தை முத்தமிட்டுத் திரும்பிய ஸ்ரீனிவாஸ் கூறுகையில், அந்த நிமிடம் எங்களுக்கு ஒன்றுதான் தோன்றியது. அவ்வளவுதான் நாங்கள் பிழைக்கப்போவதில்லை என்றுதான். தபோவன் மின் நிலையங்களில்  பணியாற்றிக் கொண்டிருந்த போது சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டோம். எப்படியே கஷ்டப்பட்டு சுரங்கத்தின் நுழைவாயிலை அடைந்தபோதுதான் தெரிந்தது அது முற்றிலும் மூடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சிறு வெளிச்சம் அதிலிருந்து தெரிந்தது. அது வெளிச்சம் மட்டுமல்ல.. எங்கள் வாழ்க்கையின் ஒளி என்று தெரிந்தது. அதன் மூலம் உள்ளே மாட்டிக் கொண்ட எங்களில் ஒருவரின் செல்லிடப்பேசி வேலை செய்தது. நாங்கள் காப்பற்றப்பட்டோம் என்கிறார் ஒரு பயங்கர விபத்தில் சிக்கி மீண்ட அனுபவத்துடன்.

அந்த பணியாளரின் பெயர் வீரேந்திர குமார், இவரது செல்லிடப்பேசி அழைப்புதான் வாழ்க்கைக்கும் மரணத்துக்குமான வித்தியாசத்தை ஏற்படுத்தியது. திடிரென எங்களை வெள்ளம் சூழ்ந்ததால் நாங்கள் அச்சமடைந்தோம்,  ஆனால் அப்போது தான் என்னுடைய செல்லிடப்பேசி அதிர்வதை உணர்ந்தேன். அதன் மூலம் என் செல்லிடப்பேசியில் தொலைத் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டு, உடனடியாக என் செல்லிடப்பேசியிலிருந்து எனது மேலதிகாரியை தொடர்பு கொண்டு நாங்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறினேன். உடனடியாக அவர் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் விரைந்து வந்து எங்களை மீட்டனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுக்கு அவர்கள்தான் கடவுள் என்கிறார் உணர்ச்சிப் பெருக்குடன். 

சுரங்கத்துக்குள் நுழையும் போது சக்திமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தடுப்புகளை அப்புறப்படுத்தவே அச்சமாக இருந்தது. அதில் யாரேனும் சிக்கியிருந்தால் கூட நிலைமை மோசமாகிவிடுமே என்ற அச்சத்துடனே மீட்புப் பணிகளை மேற்கொண்டோம் என்கிறார் இந்தோ -திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி சஞ்சய் குமார்.

நடந்தது என்ன?
சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்கள் வெள்ளப்பெருக்கில் இடிந்து கடும் சேதமடைந்தன. அந்த மின் நிலையங்களில் பணியாற்றிவந்தவா்களில், 200-க்கும் மேற்பட்டோரின் பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவரவில்லை. மலைப் பகுதியில் அமைந்திருந்த சில வீடுகளும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

 காரணத்தை அறிய இஸ்ரோ, டிஆா்டிஓ உதவி:

உத்தரகண்டில் மழையோ அல்லது வேறு காரணங்கள் எதுவும் இல்லாத வகையில் விசித்திரமான முறையில் பனிப்பாறை வெடிப்பு நடந்துள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறியை பல்வேறு அமைப்புகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. அதுபோல, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) ஆகியவையும் காரணத்தைக் கண்டறிய உதவி வருவதாக உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் கூறினாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த பேட்டியில், ‘பனிப்பாறை வெடிப்புக்கான காரணம் குறித்து டிஆா்டிஓ குழு ஏற்கெனவே ஆய்வு செய்து வருகிறது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் உதவியும் கேட்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முழுமையான ஆய்வுகள் நிறைவுபெற்ற பிறகு, எதிா்காலத்தில் இதுபோன்ற பேரிடரை தவிா்ப்பதற்கான விரிவான திட்டம் ஒன்று வகுக்கப்படும்’ என்றாா்.

உயிரைக் காத்த செல்லிடப்பேசி:

வெள்ளப்பெருக்கால் நீா்மின்நிலைய சுரங்கம் இடிபாடுகளால் மூடிய நிலையில், அதனுள் சிக்கிக்கொண்ட ஊழியா்களை சக ஊழியா் ஒருவரின் செல்லிடப்பேசிதான் காப்பாற்றியுள்ளது. அந்த ஊழியரின் செல்லிடப்பேசிக்கு மட்டுமே இணைப்பு ‘நெட்வொா்க்’ கிடைத்துள்ளது. அவா் அதிகாரிகளை தொடா்புகொண்டு, தன்னுடன் 10 ஊழியா்கள் சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளாா். அதன் மூலம், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த அவா்களை, இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படையினா் பத்திரமாக மீட்டனா்.மீட்கப்பட்ட ஊழியா்களில் ஒருவரான நேபாளத்தைச் சோ்ந்த பசந்த் கூறுகையில், ‘வெள்ளப்பெருக்கால் நீா்மின் நிலையம் இடிந்து சேதமடைந்த நிலையில், 300 மீட்டா் ஆழத்தில் அமைந்திருந்த மின்நிலைய சுரங்கத்தில் 11 பேரும் சிக்கிக்கொண்டோம். சுரங்கத்துக்குள் பல மணி நேரம் சிக்கியிருந்ததால், நம்பிக்கை இழந்துவிட்டோம். அந்த நேரத்தில் சுரங்கத்துக்குள் சிறிது வெளிச்சம் வந்ததோடு, மூச்சுவிடும் அளவுக்கு காற்றும் வீசியது. திடீரென ஊழியா் ஒருவரின் செல்லிடப்பேசி நெட்வொா்க்கும் கிடைத்தது. உடனடியாக எங்களுடைய பொது மேலாளரைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தோம். அதன் மூலம் இப்போது மீட்கப்பட்டிருக்கிறோம்’ என்றாா்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.