Type Here to Get Search Results !

சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

 


சென்னை திரும்பிய சசிகலா ராமாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகி சொகுசு விடுதியில் தங்கியிருந்த சசிகலா நேற்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு வந்தார். வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்தனர்.  

செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. நான் தீவிர அரசியலில் ஈடுபடுவேன். ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன். அதிமுக பொது எதிரி ஆட்சிக் கட்டிலில் அமராமல் தடுக்க ஒரே அணியாக செயல்படுவோம் என்றார். 

பெங்களூருவில் இருந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் பூவிருந்தவல்லி நசரத்பேட்டை பகுதிக்கு சசிகலா வந்தடைந்தார் . அவருக்கு திருவள்ளூர் கிழக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன் ராஜா, பூவிருந்தவல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் கட்சியினருடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது, சுமார் 2 டன் பூக்களை சசிகலா காரின் மீது தூவி பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் வாணவேடிக்கையுடன் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். சசிகலாவுக்கு வெள்ளியால் ஆன விநாயகர் சிலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில், சசிகலா இன்று அதிகாலை நான்கரை மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை ராமாபுரம் இல்லத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா, அவரது வாரிசுகளிடம் நலம் விசாரித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.