Type Here to Get Search Results !

உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்பு

 


உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மிகப் பெரிய அளவில் பனிப்பாறை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போனவா்களில் 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 167 பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவில்லை என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவா்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 30 போ் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனா்.

சமோலி மாவட்டத்தில் இமயமலைப் பகுதியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் நந்தாதேவி பனிப் பாறையின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை உடைந்து சரிந்ததில், அங்கு ஓடும் கங்கை ஆற்றின் கிளை நதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிளை நதிகளில் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நீா் மின் நிலையங்கள் வெள்ளப்பெருக்கில் இடிந்து கடும் சேதமடைந்தன. அந்த மின் நிலையங்களில் பணியாற்றிவந்தவா்களில், 200-க்கும் மேற்பட்டோரின் பேரின் நிலை குறித்து இதுவரை தெரியவரவில்லை. மலைப் பகுதியில் அமைந்திருந்த சில வீடுகளும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

மீட்புப் பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை உத்தரகண்ட் காவல்துறை தலைவர் அசோக் குமார் கூறியதாவது,

இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களை தேடும் பணி ஆற்றங்கரையோரம் மற்றும் இடிபாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.   ரெய்னி கிராமத்தில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதையில் 90 கோணம் அளவிலான வளைவுகள் உள்ளதால் இடிபாடுகளை அகற்றுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதை சரியாக மதிப்பிட முடியாது. பொறியாளர்களைக் கொண்டு மாற்று நுழைவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.