Type Here to Get Search Results !

ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பான கொலை வழக்கில் 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதி... ஓ.பன்னீர் செல்வம்


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இரட்டை ஆயுள் தண்டனையும் தாண்டி உள்ளதால் அவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள் பல ஆண்டுகாலமாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. வழக்கில் 7 நாள்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்த வழக்கு பிப்ரவரி 9ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் நிராகரித்து விட்டார். இதற்கு பல அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சரவை முடிவை அவமதித்து; அரசமைப்பு வழங்கும் மாநில உரிமையையும் கேலி செய்திருக்கிறார் கவர்னர் என்று பதிவிட்டுள்ளார் அற்புதம்மாள். என்ன செய்வதம்மா என பலரும் கொதிப்போடு கேட்டபடி உள்ளனர். ஒரு தாயாக இன்னும் நான் என்ன செய்ய? பதிலை மாநில அரசுதானே சொல்லவேண்டும்? செயல்பட வேண்டும்? " என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பேரறிவாளன் விடுதலை குறித்து அரசு நடவக்கை எடுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பான பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து சட்டப்பூர்வ ஆலோசனை மேற்கொண்டு உரிய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எழுவர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருகே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆளுநரைச் சந்திக்கும் போதெல்லாம் எழுவர் விடுதலை குறித்து வலியுறுத்தியுள்ளோம் என்று முதல்வரே தெரிவித்துள்ளார்.

எங்களைப் பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என எப்போதும் 7 பேரை விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்று கூறினார். குடியரசுத் தலைவரைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கை உள்ளது. 7 பேர் விடுதலை தொடர்பாக தொடர்பாக ஆளுநரை சந்தித்து அழுத்தம் கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்

திமுகவைப் போல் இரட்டை வேடம் போடவில்லை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ஒருவருக்கு மட்டும் தண்டனையைக் குறைக்க தீர்மானமும் போடவில்லை. அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றே நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.