Type Here to Get Search Results !

திமுக ஆட்சியில், எப்போது கரெண்ட் வரும், எப்போது போகும் என்றே தெரியாது... எடப்பாடியார் அதிரடி

 


முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது அம்பத்தூரில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை, 2006 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படுமென்று கருணாநிதி தெரிவித்து கடைசிவரையில் வழங்காமலேயே போய்விட்டார்‌. அது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றப் பேரவையில் கருணாநிதியிடம் கேள்வி எழுப்பியபோது கையளவு நிலமாவது கொடுப்பேன் என்று கூறினார். அவ்வாறு பொய் வாக்குறுதி கொடுப்பவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய சரித்திரம் கிடையாது. ஊர் ஊராகச் சென்று கவர்ச்சிகரமான, பொய் வாக்குறுதிகளை கொடுப்பார்கள், அது அந்தத் தேர்தலோடு போய்விடும். நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து மக்களைக் குழப்பி அதன் மூலம் வெற்றி பெறுவார்கள்.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஒரு திண்ணையில் அமர்ந்து அப்பாவிப் பெண்களை முன்னால் அமர வைத்து பேசுவார். அப்பெண்களை அழைத்து வரும்போதே திமுக நிர்வாகிகள், இப்படித்தான் பேச வேண்டும் என்று எழுதிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து, கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்லி அமர வைத்து பேச வைப்பார்கள். திருவண்ணாமலையில் ஒரு பெண்மணி பேசும்போது ஸ்டாலினுடைய பட்டப் பெயரை சொல்லி, எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று பேசுகிறார் அவர் என்ன பேசுகிறார் என்று கூட தெரியாமல் இவர் நன்றி நன்றி என்று சொல்கிறார்.

என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசுகிற ஒரு எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான்.

திருவண்ணாமலையில் ஒருவர், தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டார், எனவே முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என்று மனு கொடுத்தார். அந்த மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவருக்கு நிதியும் வழங்கப்பட்டுவிட்டது. அது தெரியாமலேயே திமுக தலைவர் எங்களுடைய அரசு மீது குறை சொல்வதற்காக அந்தப் பெண்மணியை எழுந்து பேசச் சொல்கிறார். அந்தப் பெண்மணியும் பணம் வாங்குவதற்கு கடிதம் கொடுத்து இருக்கிறார். அப்படிப் பொய் சொல்லச் சொல்லி இந்த அரசு மீது வீண் பழி சுமத்தி கொண்டிருக்கிறார்கள். ஆகவே, ஸ்டாலினால் அதிமுக ஆட்சியை எந்தக்காலத்திலும் வீழ்த்த முடியாது. நீங்கள் எவ்வளவு பொய் பேசினாலும் மக்கள் அதை நம்ப மாட்டார்கள். ஏனென்றால், உங்கள் கடந்த கால வரலாறு அவ்வாறு உள்ளது.

2016 தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவுடன் எல்லா வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என்று தெரிவித்தார். திமுக காரர்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் கொடுக்கின்ற அரசு ஜெயலலிதாவின் அரசு. இன்றைக்கு கேரளத்தில் பார்த்தால், வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணம் 1 யூனிட்டுக்கு 6 ரூபாய் 80 காசு, ஒரு மாதத்திற்கு 100 யூனிட் விலையில்லாமல் கொடுக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு வீட்டிலுள்ள மின் இணைப்பிற்கும் 680 ரூபாய் விலையில்லாமல் கொடுக்கிறோம், அதனால் மின் இணைப்பு பெற்றவர்கள், வருடத்திற்கு சுமார் 8000 ரூபாய் பயன் பெறுகிறார்கள், ஐந்தாண்டுகளுக்கு பார்த்தால், ஜெயலலிதாவின் அரசு மூலம், ஒவ்வொரு வீட்டிலும் 40,000 ரூபாய் ஜெயலலிதாவின் அரசால் பயன் பெறுகிறார்கள். எண்ணிப் பாருங்கள், திமுக ஆட்சியில் கொடுத்தார்களா? திமுக ஆட்சியில், எப்போது கரெண்ட் வரும், எப்போது போகும் என்றே தெரியாது. 2006 முதல் 2011 வரை கடுமையான மின்வெட்டு. அதனால், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய புதிய தொழிற்சாலைகளெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டன என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.