Type Here to Get Search Results !

சசிகலா விவகாரத்தில் அதிமுக முடிவுக்கு பாஜக ஆதரவு.... மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி

 


தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது, இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தலிலும் வழக்கம்போல பிரதான நேரெதிர் கட்சிகளான அதிமுக-திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. அந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தமிழக பாஜக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. இதுநாள்வரை தங்கள் கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து பாஜக தேசிய தலைமை அறிவிக்கும் என தமிழக பாஜக கூறிவருவது, அதிமுக பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் தெரிவித்த அவர்,  தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி என்பதால் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சி முன்னிறுத்தி உள்ளது. அவரும் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார். அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது தொடர்பான முடிவுகளை அதிமுக எடுக்கும், மொத்தத்தில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு, எனவே நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் அதிமுகவுக்கு எந்த எதிர்ப்பு அலைகளும் இல்லை. மக்கள் அதிமுகவையும் வரவேற்கின்றனர். அதனால்தான் எடப்பாடி பழனிச்சாமியின்  பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்கின்றனர். 

வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஒரு தேர்தல் அறிக்கையும், பாரதிய ஜனதா சார்பில் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும். தற்போது அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அதிமுகவிடம் எத்தனை இடங்கள் பெறுகிறோம் என்பது முக்கியமல்ல, அதில் எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பதுதான் முக்கியம். இந்தமுறை இரட்டை இலக்க எண்ணிக்கையிலான வெற்றியை பெற்று விட வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம், பாஜக முன்னெடுத்த வேல் யாத்திரை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அது வரும் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும், தமிழக பாஜகவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவரை உருவாக்க திட்டமிட்டுள்ளோம், மக்கள் செல்வாக்குள்ள தலைவர் உருவாக்கிவிட்டால், கட்சி தானாக வளரும். பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சியாக சித்தரிக்கப்படுகிறது, அந்த மனநிலை விரைவில் மாறும். 

அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம், சசிகலா வருகை என்பது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இந்த விஷயத்தில் அதிமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு எங்களின் ஆதரவு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதாவது திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் இரண்டாகப் பிரிந்துள்ள அதிமுகவை ஒன்றாக இணைக்க வேண்டும் என பாஜகவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். பாஜக  அபிமானியான குருமூர்த்தியும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளார், சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவர் தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் அவரை சந்திக்கும் அதிமுகவினரை, கட்சி தலைமை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கி வருகிறது. சசிகலா விடுதலையாகி வந்தாலும் அதிமுகவில் அவர்கள் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அமைச்சர்கள் கூறிவருகின்றனர், ஒரு படி மேலே போய் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தினார் என்பதற்காக அவர்மீது காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்களே புகார் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் அவர் தமிழகம் வர உள்ளார், அவர் வந்த பின்னரே அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே, அதிமுகவின் நடவடிக்கைகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவியும் சசிகலா விவகாரம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என கூறியிருப்பது அவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாக பாஜக இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளதாக தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.