தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலக்கபட்டுள்ளன. 2016ம் ஆண்டு தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளிலும், 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் வருமான வரித்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இந்த முறையும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியவை நடைபெறுவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவில் 250 அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த சிறப்பு படையுடன் வருமான வரித்துறையின் 400 அதிகாரிகளும் இணைந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் 15 இடங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் 55 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறையினருக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடத்த வருமான வரித்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுக்கும் வங்கி கணக்குகளை கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டதா? என தெரியாது எனவும், நாள்தோறும் பறிமுதல் செய்யப்படும் பணம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.