அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசுகையில்;- 10 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில் இருட்டுக்கு பின், விடியல் வேண்டும். கருணாநிதி ஆட்சி வர, ஸ்டாலின் முதல்வராக வேண்டும்என்கிறோம்.
ஆனால், எடப்பாடி பழனிசாமியோ ’10 ஆண்டு நல்லாட்சி தொடர எனக்கு வாக்களியுங்கள் என்ற கூறுகிறார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இருவரையும் எடை போட்டு பார்ப்போம். ஜனநாயகத்தை காப்பாற்ற, சிறையில் இருந்தவர் ஸ்டாலின். கட்சியில், மாவட்ட பிரதிநிதி,பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என, படிப்படியாக உயர்ந்து, தலைவரானார். ஆட்சி நிர்வாகத்திலும், எம்.எல்.ஏ., மேயர், உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்வர் என, உயர்ந்தார். இப்போது, முதல்வராகப் போகிறார். அவர் யாராலும் திணிக்கப்பட்டவர்அல்ல. முறைப்படி பெண் பார்த்து நிச்சயம் செய்து திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி, 300 நாட்கள் கழித்து, சுகப் பிரசவத்தில் பிறந்தவர் ஸ்டாலின்.
ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை, இபிஎஸ்.சை யாருக்கும் தெரியாது. இவர், ஊர்ந்து போய் முதல்வரானார். எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது. பொது வாழ்வில், அவர் எட்டியிருக்கிற தொலைவு என்ன; ஒன்றும் கிடையாது. நல்ல உறவில், ஆரோக்கியமாக சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின்; கள்ள உறவில் பிறந்த குறை பிரசவம், எடப்பாடி பழனிசாமி நல்ல குழந்தைக்கு தாய்ப்பால் போதும். தமிழகம் தான் அவருக்கு தாய். குறை பிரசவ குழந்தையை காப்பாற்ற, டெல்லியில் இருந்து மோடி என்ற, டாக்டர் வருகிறார். ஆ.ராசாவின் அருவறுப்பான, தரங்கெட்ட பேச்சு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அனுதாபிகளோ, ஆ.ராசாவின் பேச்சு அத்துமீறியது. இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று ஆவேசமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், திமுகவினே ஆ.ராசாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆ.ராசாவின் பேச்சுக்கு அருவறுப்பான பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவியும், எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும் என பதிவிட்டுள்ளார்.