Type Here to Get Search Results !

மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது, மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார்…. மோடி

 
மம்தா பானர்ஜியின் ஆட்டம் முடியப்போகிறது, மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார் என மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது.

இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் பர்தாமனில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:

நந்திகிராமில் மம்தா பானர்ஜி கிளீன் போல்டாகிவிட்டார். மம்தாவின் ஒட்டுமொத்த குழுவினரும் களத்தை விட்டு வெளியேறும்படி மக்கள் கூறிவிட்டனர். வங்க மக்கள் அதிக பவுண்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்துவிட்டனர். இதனால் நடந்து முடிந்த 4 கட்ட தேர்தல்களிலும் பாஜக செஞ்சூரி அடித்துள்ளது.

மம்தாவின் ஆட்டம் முடியப்போகிறது. மே 2-ம் தேதி அவர் வீட்டிற்கு சென்றுவிடுவார். திரிணமுல் கட்சியினர் தலித்களை பிச்சைக்காரர்கள் என கொச்சைப்படுகின்றனர். மம்தாவுக்கு தெரியாமல் அவரது கட்சியினர் இதுபோன்று பேச முடியாது.

மம்தா அவர்களே, உங்கள் கோபத்தை யார் மீதாவது காட்ட விரும்பினால், நான் இங்கே இருக்கிறேன். உங்களது முழு கோபத்தையும் என் மீது காட்டுங்கள். ஆனால் மேற்குவங்கத்தின் கண்ணியத்தையும் பாரம்பரியத்தையும் அவமதிக்க வேண்டாம். மம்தா பானர்ஜியின் ஏதேச்சதிகாரத்தை வங்க மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்குவங்கத்திற்கு வந்த துணிச்சலான காவல்துறை அதிகாரி அடித்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் கண்டதும், அவரது தாயாரும் இறந்துவிட்டார். மம்தா அவர்களே, அந்த அதிகாரியின் தாய் உங்களுக்கு ஒரு தாய் இல்லையா. நீங்கள் எவ்வளவுக்கு இரக்கமற்றவர் என்பதை இங்குள்ள தாய்மார்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.