சித்திரைத் தமிழ் புத்தாண்டு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பிறக்கப் போகும் புத்தாண்டு பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
சித்திரைத் தமிழ் புத்தாண்டு 2021 – பிலவ வருடம்
அறுபது வகையான தமிழ் வருடங்களின் சுழற்சியில் 35-ஆவது வருடம் தான் “பிலவ” வருடம்.
நம் தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது. இதை பாரம்பரியமாக சித்திரை திருநாள் என்றும் மற்றும் கிராமப்புறங்களில் சித்திரக்கனி என்றும் அழைப்பார்கள். வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, தமிழ் புத்தாண்டு 14ம் திகதி புதன்கிழமை அதிகாலை 01.39 மணிக்கு பரணி நட்சத்திரம் 2ம் பாதத்தில் பிறக்கிறது.
எனவே இந்த வருடம் நாம் சற்று போராட வேண்டி இருக்கின்றது. பிலவ ஆண்டான இந்த வருடம் சற்று அலைச்சல் உள்ளதாகவே இருக்கும். ஜோதிட சாஸ்த்திரத்தை வைத்து பார்த்தால், இந்த வருடத்தை புதன் கிரகமே ஆட்சி செய்கிறார். அறிவு மற்றும் பேச்சாற்றல் முதலியவற்றை குறிக்கும் புதன், இந்த தமிழ் வருடப் பிறப்பில், நமக்கு நம்பிக்கை, முன்னேற்றம் போன்ற பல பலன்களை தருவார் என எதிர்பார்க்கபடுகிறது.
சித்திரை வசந்த காலம்
சித்திரை மாதத்தை ஏன் வசந்த காலம் என்று அழைக்கிறார்கள் தெரியுமா?
சித்திரை மாதம் பிறந்தவுடனே இளவேனில் காலம் துவங்கும். இந்த வசந்த காலத்தில் தான் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கி அற்புதமான, அழகான காட்சியை நமக்கு கொடுக்கும். அதே சமயத்தில் வேப்பம் மரத்தில் வேப்பன் பூக்கள் இளம் பச்சை நிறங்களில் பூத்துக் குலுங்குமாம். இதற்கு அர்த்தம் என்னவெனில் வாழ்க்கையானது இனிப்பும், கசப்பும் கலந்து இருக்கும் என்பதாம்.