திருநெல்வேலி மாவட்டம் வீரவநல் லூர் அருகே அத்தாளநல்லூரில் உள்ள மூன்றீஸ்வரமுடையார் கோயில் மண்டபத்தில் நெல் மூட்டைகளை அடுக்கிவைத்து புனித த்தை கெடுத்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அங்கு செயல்பட்ட அரசு நெல்கொள்முதல் நிலையம் மாற்றப்பட்டு, நெல் மூட்டைகள் அகற்றப்பட்டன.
அத்தாளநல்லூரில் அமைந் துள்ள மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் மரகதவல்லி தாயார் சந்நிதி தவிர விநாயகர், சுப்பிர மணியர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகிய உபசந்நிதிகளும் அமைந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் 2 கால பூஜைகளும், சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவிழாவும் நடைபெறுகிறது.
வீடியோவால் அதிர்ச்சி
8-ம் நூற்றாண்டை சேர்ந்த இப்பழமையான கோயில் வளாகத்தையும், சுற்றியுள்ள மண்டபத்தையும் அரசு நெல் கொள்முதல் நிலையமாகவும், அரிசி கிட்டங்கியாகவும் மாற்றியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இக்கோயிலை அரிசி கிட்டங்கியாக மாற்றியதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிசி கிட்டங்கியை மாற்ற வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி களுக்கு சிவனடியார்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
நெல் மூட்டைகள் அகற்றம்
இது தொடர்பாக சென்னை யிலுள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்ததை அடுத்து நேற்று முன்தினம் உள்ளூர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அதிகாரிகள் நேற்று அங்கு சென்று அரசு நெல்கொள்முதல் நிலையத்தை அங்கிருந்து அகற்றவும், கோயில் வளாகத்திலும், மண்டபங்களிலும் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகளை லாரிகள், டிராக்டர்களில் ஏற்றி வேறுஇடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்து மத துரோக விவசாயிகள் எதிர்ப்பு
அதேநேரத்தில் அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கைக்கு அங்குள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகள் கூறும்போது, ”அத்தாளநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிரிட்ட நெல் அறுவடை செய்யப்பட்டு நெல் மூட்டைகள் இங்கு கொண்டுவரப்படுகின்றன. கடந்த ஆண்டும் அங்கு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. மழையில் நனைந்து நெல்மூட்டைகள் வீணாகி விடக்கூடாது என்பதற்காக கோயில் மண்டபத்தில் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தோம்.
தற்போது வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு நெல்கொள்முதல் நிலையத்தை மூடசெய்துள்ளதாக கூறினர். இதனிடையே கோயில் வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதித்தது தொடர்பாக கோயில் நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரிடம் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.