நீங்கள் என்னை வெற்றி பெறச் செய்து சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினால் பிரதமர் மோடியிடம் கூறி உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன் என குஷ்பு ஆயிரம்விளக்கு தொகுதி பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளது. இந்நிலையில் அதிமுக-திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு இத்தேர்தல் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக இந்த முறை ஆட்சியைப் பிடித்தேயாக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக தமிழகத்தில் கால் பதிக்க போராடி வரும் பாஜக இந்த முறை எப்படியேனும் இரட்டை இலக்க வெற்றியுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், தனக்கென தனித்துவத்தை தமிழகத்தில் உருவாக்க தமிழக பாஜக போராடி வருகிறது. அதற்காக பாஜகவின் முக்கிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதீய ஜனதா கட்சியின் ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் திருமதி குஷ்பூ அவர்கள் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.அவர் நாள்தோறும் தவறாமல் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட தேனாம்பேட்டை அலுவலகர் குடியிருப்பில் இன்று வாக்கு சேகரித்தார். மக்கள் மத்தியில் பேசிய அவர் ,இந்த தேர்தல் எனக்கு மிகவும் முக்கியமான தேர்தல், இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்து மக்களாகிய நீங்கள் என்னை வெற்றி பெற செய்தால், நான் பிரதமர் மோடி அவர்களிடம் கூறி இந்த குடியிருப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கண்டிப்பாக செய்து தருவேன் என்று வாக்களித்தார். அனைவரும் மறவாமல் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்ககள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.